புத்தாண்டு முதல் ஒன்றரை மணி நேரத்திற்குட்பட்ட விமானப் பயணங்களின் போது அசைவ உணவுகள் வழங்கப்படாது என வெளியான தகவலை ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது. முன்னதாக புத்தாண்டு தினம் முதல் ஏர் இந்தியா விமானங்களில் 90 நிமிடங்கள் வரை பயணம் செய்யும் பயணிகளுக்கு இனி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என தகவல் வெளியானது. நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா பொது மேலாளர் கேப்டன் டி எஸ் பைஸ் வெளியிட்ட உத்தரவில், "உள்நாட்டு விமானங்களில் 60 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை செல்லும் விமானங்களில் ( எக்கனாமிக்கல் ) இனி சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் . இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும் மதிய உணவு மற்றும் இரவு நேர உணவின் போது இனி காப்பி, டீ வழங்க வேண்டாம்" எனக் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின.
ஒவ்வொரு பயணிக்கும் அவர்களுக்கு விருப்பமான சைவ அல்லது அசைவ உணவை கேட்டு அதனை விமானப் பணியாளர்கள் கொண்டு சென்று கொடுப்பதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. இதனால் 60 முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயணத்தில் ஊழியர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுவதாகவும், இதன் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. ஏர் இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான விவாதங்களும் சமூகவலைதளங்களில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயணிகள் புகார் மெயில்களையும் அனுப்பினர். இந்நிலையில், தற்போது இந்தத் தகவலை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘‘ஏர் இந்தியா சுற்றறிக்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு முன், சைவ சான்ட்விஜ் மற்றும் நொருக்குத்தீனி வழங்கப்பட்டு வந்தது. குளிர்காலம் மற்றும் புத்தாண்டையொட்டியும், நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும் இனி கூடுதலாக சூடான உணவு வழங்கப்பட உள்ளது. இது உணவை மேம்படுத்தும் ஒரு முயற்சிதான். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை' என விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment