டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற இளம் குற்றவாளியின் விடுதலைக்கு தடை கோரிய மகளிர் ஆணையத்தின் மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதான இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி டெல்லி சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன், நேற்று (ஞாயிறு) விடுதலை செய்யப்பட்டான். ஆனால் குற்றத்தின் கொடூரத்தை கருத்தில் கொண்டு சிறார் சட்டத்தின்படி விடுதலை செய்ய தடை விதிக்கக் கோரி டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறார் சீர்திருத்த சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனை முடிந்த பிறகும் ஒருவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை என்பதால் விடுதலைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
குறிப்பிட்ட இளம் குற்றவாளியின் விடுதலை, தங்களுக்கும் கவலை அளிப்பதாக கூறிய நீதிபதிகள், இருப்பினும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஒருவர், காவலில் வைப்பதைப் பொறுத்த வரையில் உரிய சட்டத்தின் அனுமதியின்றி அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும், சிறார் சீர்திருத்த சட்ட விதி 55ன்படி தண்டனைக்குப் பிறகு அவருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். எனவே சட்டத்தின் அனுமதியின்றி இளம் குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சட்ட விதிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்றார்.
No comments:
Post a Comment