மலேசியாவில் இருந்து திருச்சி வரப்பட்ட விமானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருகிறது. இதில் மலேசியாவில் இருந்து வரும் கடத்தல்காரர்கள் விமானத்தின் இருக்கையின் அடியிலும், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடத்தல் தங்கத்தை மறைத்து வைப்பார்களாம். பின்னர் அவர்கள் சென்னையில் இறங்கிக்கொண்டு, தங்களது கூட்டாளிகளுக்கு தங்கம் இருக்கும் இடத்தை தெரிவித்துவிடுவார்களாம். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் செல்லும்போது அதில் ஏறும் கடத்தல்காரர்களின் கூட்டாளிகள் அந்த தங்கத்தை எடுத்து தங்களது பைகளில் வைத்துக்கொள்வார்கள் என்றும், சென்னையில் இருந்து திருச்சிக்கு உள்நாட்டு சேவை என்பதால் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் சோதனை இருக்காது என்பதால், தங்கத்தை கிலோ கணக்கில் கடத்தல்காரர்கள் கடத்தி செல்வதாக மத்திய வருவாய் நுண்ணறிவு சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் போல ஏறி விமானம் புறப்பட்டதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் பல்வேறு இடங்களில் கடத்தல்காரர்களால் 5 கிலோ அளவுக்கு தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த மத்திய வருவாய் தனிப்படையினர், விமானம் திருச்சி வந்தவுடன், பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். பறக்கும் விமானத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment