உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 2 லாரிகளில் கற்களை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குவித்திருக்கின்றனர். மேலும் மோடி அரசுதான் ராமர் கோவிலை கட்டுவதற்கான சிக்னல் கொடுத்துவிட்டதாக அயோத்தி ராமர் ஜென்ம பூமி நியாஸ் தலைவர் மக்ந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் அயோத்தியில் ராமர் கோவிலை எப்படியும் கட்டிவிடுவது என்பதில் இந்துத்துவா அமைப்புகள் மும்முரமாக இருக்கின்றன. இந்த கோவிலை கட்டுவதற்காக நாடு முழுவதும் கற்கள் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் என்று 6 மாதங்களுக்கு முன்னரே விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திடீரென 2 லாரிகளில் ராமர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கற்கள் நேற்று கொட்டப்பட்டன. இந்த கற்களுக்கு ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவ மகந்த் நிருத்ய கோபால் தாஸ் பூஜை செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவிலை கட்டுவதற்கான சிக்னலை மோடி அரசு கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்தே ராமர் கோவிலைக் கட்டுவதற்காக வந்துள்ளேன். தொடர்ந்து கற்கள் குவிக்கப்படும் என்றார். இது குறித்து ஃபைசாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் மொகித் குப்தா கூறுகையில், கற்கள் தனியார் இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் ஏதும் நிகழ்வுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மொத்தம் 2.25 லட்சம் கன அடி கற்கள் தேவை. தற்போது அயோத்தியில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் மொத்தம் 1.25 லட்சம் கன அடி கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய கற்களை இறக்கும் பணி தொடங்கியிருப்பதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment