சென்னையில் பெய்து வரும் கனமழைக்கு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் நீரில் நீந்திச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் செல்ல முடியாததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சாலைகளில் மழைநீர்: கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அடையாறு, அண்ணாசாலை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம், தாம்பரம், அம்பத்தூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ளது. மத்திய கைலாஷ் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளங்களின் காரணமாகவும், மழை நீர் தேங்கியுள்ளதால் நகரின் மற்ற இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரத்தில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனையில் மழை நீர் தேங்கியுள்ளதால், நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சென்னை நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ளம்: புழல் ஏரியில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் 25 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பெரும்பாலனோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் நிறுத்தம்: சென்னை நகரின் உட்புற சாலைகளில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மினி பஸ்களின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாநகர பஸ்களை இயக்க முடியாத பகுதிகளில் வசிப்போர் நலன் கருதி சென்னையில் 100 மினி பஸ் சேவை துவங்கப்பட்டது. ரயில், பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில், இந்த பஸ்கள் இயக்கப்படுன்றன.ஆனால், பிரதான சாலைகளில் பஸ்களை இயக்க முடியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் இந்த சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளை பராமரிக்கும் பணிமனையில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அவற்றை பராமரிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதால் 300 பஸ்கள் முடங்கி கிடக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் துண்டிப்பு: கனமழை விடாது பெய்து வருவதால் வடபழனி, சூளைமேடு, கில் நகர், கோடம்பாக்கம், மேதா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment