நாகர்கோவில்: தென் தமிழக கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், பேரலைகள் ேதான்ற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் முதல் வாரத்திற்கு பின் வலுவடைந்து கனமழை பெய்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடலூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் பெய்த வரலாறு காணாத மழையாலும், செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் சென்னை, கடலூர் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதேபோல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது.
கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்திலும் மழையை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அவ்வப்போது சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதற்கிடையே குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும், 8 அடி முதல் 9 அடி உயரத்திற்கு பேரலைகள் எழ வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலை நாளை (28ம் தேதி) இரவு 11.30 மணி வரை நீடிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 44 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் எனவும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று சூறைக்காற்று வீசியது. நீர்மட்டம் ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர்பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் இன்று காலையும் பலத்த காற்று வீசியதன் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் இந்திய கடல் சேவை மையம் இன்னும் 24 மணிநேரத்தில் கடல் பகுதியில் சீற்றம் அதிகரிக்கும் என எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஏற்கனவே கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கடற்கரை பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள். இந்திய கடல் தகவல் சேவை மையத்தின் இந்த அறிவிப்பால், குமரி மாவட்டம் உட்பட தென் மாவட்ட மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு சுனாமியின்போது கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர், நாகை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமியில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந்த கோர சம்பவம் நடந்து நேற்றுடன் 11 ஆண்டுகள் கடந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோர், குடும்பத்தை, உறவினர்களை இழந்த மக்களுக்கு இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது. ஏராளமானோர் கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். மழை வெள்ள பாதிப்பிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது விடுக்கப்பட்ட பேரலை எச்சரிக்கையால் மீண்டும் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment