முறைகேடுகளை தடுக்க சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வில் தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பென்சில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. தேர்வுக் கூடத்தில் சிபிஎஸ்இ நிர்வாகமே அவர்களுக்கு பேனா வழங்கியது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான சிபிஎஸ்இ ‘நெட்’ தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் எஸ்பிஓ மேல்நிலைப்பள்ளி உட்பட 24 மையங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.
இதுவரை நடைபெற்ற சிபிஎஸ்இ நெட் தேர்வில் தேர்வர்கள் தாங்கள் கொண்டுவரும் பால் பாயின்ட் பேனாவை கொண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது முதல்முறையாக வெளியில் இருந்து பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. தேர்வுக் கூடத்தில் சிபிஎஸ்இ நிர்வாகமே தேர்வர்களுக்கு பால் பாயிண்ட் பேனா வழங்கியது. அதில் சிபிஎஸ்இ நெட் தேர்வு என்று அச்சிடப்பட்டிருந்தது. தேர்வு முடிந்தும் அந்த பேனா தேர்வர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது.
கடந்த மே மாதம் சிபிஎஸ்இ நடத்திய அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் உறுதிசெய்யப்பட்ட நிலை யில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை மாதம் மறுதேர்வு நடத்தப் பட்டது. தேர்வர்கள் கொண்டு வரும் பேனாக்களில் பிட் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய வழிகாட்டு விதி முறைகள் ஆராயப்பட்டன. அதன் படி, திரும்ப நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் வெளியில் இருந்து பேனா, பென்சில் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டு தேர்வர் களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்பட்டது. இந்த புதிய முறை தற்போது நெட் தேர்வுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித் தனர்.
நெட் தேர்வு குறித்து திருச்சி மையத்தில் தேர்வெழுதிய முறிசி மாணவர் முருகானந்தம் கூறும் போது, “நேரடி கேள்விகளாக இல்லாமல் நன்கு யோசித்து விடையளிக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன” என்றார். திருச்சியைச் சேர்ந்த மாணவி விஜயலட்சுமி, “தேர்வு எளிதாகவே இருந்தது. எனினும், முதல் தாளான பொது அறிவு தாளுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. பாடம் தொடர்பான 3-வது தாளுக்கு நேரம் அதிகமாகவே இருந்தது” என்றார்.
“சிஎஸ்ஐஆர் நெட் தேர்வைப் போல சிபிஎஸ்இ நெட் தேர்விலும் தவறான கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும்” என்று நெட், ஸ்லெட் தேர்வெழுதுவோர் சங்க நிறுவனர் சுவாமிநாதன் யோசனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment