எனது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதட்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சில மணிநேரங்கள் நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் கூறுகையில், வருமான வரித்துறையினர், அமலாக்கப் பிரிவினரின் சோதனை எனது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் நேருக்குநேர் மோதட்டும். அந்த நிறுவனங்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எவ்வித பொருளாதார தொடர்பும் இல்லை என நாங்கள் அடுத்தடுத்து கூறிவந்துள்ளோம். உள்நோக்கத்துடன் இந்த அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள எதிர்கொள்ள நானும் எனது குடும்பத்தாரும் தயாராகவே இருக்கிறோம். இந்த அரசு என்னை குறிவைக்க விரும்பினால், நேரடியாக மோதலாம். மாறாக, சொந்தமாக தொழில் செய்துவரும் அரசியலில் தொடர்பே இல்லாத எனது மகனின் நண்பர்களை வேதனைப்படுத்த கூடாது. மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தைச் சேர்ந்த ஒருஅதிகாரியின் உத்தரவின் பேரில் எனது மகனின் நண்பர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. மத்திய நிதி அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு முந்தைய காலத்தில் அந்த அதிகாரியின் மீது முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என நான் நிதி அமைச்சராக இருந்தபோது அந்த அதிகாரி என்னை அணுகினார். எனக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நான் ரத்து செய்ய இயலாது என கூறி மறுத்து விட்டேன். தற்போது, மத்தியில் ஆட்சி மாறிய பின்னர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனது மகனின் நண்பர்களை கொடுமைப்படுத்தும் வாய்ப்பு அந்த அதிகாரிக்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment