தமிழக மகளிர் காங்கிரஸ் அணியின் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏவை தரக்குறைவாக பேசி தாக்க முயன்ற மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விழாவில் வைக்கப்பட்டிருந்த விஜயதாரணியின் பேனரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்துவிட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று சென்ற விஜயதாரணி மாநிலத் தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசினார்.
கட்சி அலுவலகத்தில் தான் வைத்த பேனரை சிலர் அகற்றிவிட்டதாக இளங்கோவனிடம் புகார் கூறினார். மேலும், அந்த பேனர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வீசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தன்னை இழிவுபடுத்தும் இந்த செயலலில் ஈடுபட்டவர்கள் மீது கட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயதாரணி கேட்கவே, அதற்கு இளங்கோவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயதாரணி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது இளங்கோவன் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி மகளிரணி வைத்த பேனரை இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்ததாகவும், அதுபற்றி கேட்டபோது, தம்மை இளங்கோவன் தகாத முறையில் பேசிவிட்டதாகவும் விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன், தம்மை கட்சியிலிருந்து வெளியேறுமாறு கூறியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இனியும் இளங்கோவன் மாநில தலைவராக நீடிப்பது கட்சியை பாதிக்கும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விஜயதாரணி கேட்டுக்கொண்டுள்ளார். விஜயதாரணி கூறியுள்ள புகாருக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார். பெண்களை தாம் ஒருபோதும் தரக்குறைவாக பேசியதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை அண்ணாசாலை காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவி சாந்தாஸ்ரீ அளித்துள்ள புகாரில், எம்.எல்.ஏ விஜயதாரணியை, தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment