பீகார் சட்டசபை தேர்தலில் பிரமாண்ட வெற்றியை பெற்ற நிதிஷ்குமாருக்கு அக்னி பரீட்சை போல காத்திருக்கிறது அமைச்சரவை உருவாக்குவது. அதிக இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் வென்றிருப்பதால் அக்கட்சி அதிக அமைச்சர்களைக் கேட்கக் கூடும்.. இதனால் நிதிஷ்குமார் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள கூடும் என தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் ஒன்று திரண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த அணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 71; காங்கிரஸ் 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
அனேகமாக வரும் 20-ந் தேதி நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்கலாம் என தெரிகிறது. நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாக அறிவித்த போதும் அதிக இடங்களை ராஷ்டிரிய ஜனதா தளம் பெற்றிருப்பதால் அதிக அமைச்சர்கள் தங்கள் கட்சிக்கே என அவர் கேட்க உரிமை இருக்கிறது. அத்துடன் 27, 26 வயதாகும் தமது மகன்களையும் அமைச்சராக்க வேண்டும் என்று லாலு நிபந்தனை விதித்து வருகிறார். அனுபவே இல்லாத இவர்களை எப்படி அமைச்சராக்குவது என்பது நிதிஷின் குழப்பம். மேலும் கடந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 27 இடங்களில் வென்றுள்ளது. அக்கட்சியும் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறது. அத்துடன் அமைச்சரவை உருவாக்கத்தில் தமது கட்சியினரையும் திருப்திபடுத்தியாக வேண்டும். நிச்சயம் இந்த அமைச்சரவை உருவாக்கம் என்பது நிதிஷ்குமாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment