டெல்லியில் முன்னாள் ராணுவத்தினர் தங்களது பதக்கங்களை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பதவி, ஒரே ஓய்வூய்தியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறைகள் இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் கூறியுள்ளனர். அரசு அறிவித்துள்ள ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி 2 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்தனர்.
டெல்லியின் ஜந்தர்மந்தரில் பல நாள்களாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்தனர். அதன்படி, நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் அனைத்து முன்னாள் ராணுவத்தினரும் தங்களது பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் திருப்பி அளிக்க தீர்மானித்தனர். இதனிடையே அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்துக்கான அரசாணையை வெளியிட்டது. எனினும், அதில் உள்ள முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநில முன்னாள் வீரர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் நேற்று தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்தனர். பதக்கங்களை திரும்ப பெற மாவட்ட ஆட்சியர்கள் மறுத்த போது அவைகளை சாலையிலேயே விட்டு சென்று விடுவதாக முன்னாள் ராணுவத்தினர் கூறியதையடுத்து பதக்கங்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இதனிடையே வாஸ்கோடகாமாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர், "முன்னாள் ராணுவத்தினர் செயல்கள் ஒரு ராணுவீரரைப் போன்று இல்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்" என்றார். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்துக்காக அரசு ரூபாய் 80 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள நிலையில் பதக்கங்களை திருப்பி அளிப்பது என்பது அதற்கான மரியாதையை குறைப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment