திப்பு சுல்தான் பிறந்த தினத்தை 10 நாட்கள் முன்பாக தீபாவளி தினத்தில் கொண்டாடி கலவரத்தை தூண்டியதாக கர்நாடக அரசு மீது குறிப்பாக முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைசூர் மண்டலத்தில் ஆட்சி நடத்திய மன்னர் திப்பு சுல்தான். வெள்ளையருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டதாக வரலாறு உள்ளது. அதேநேரம், கர்நாடகாவை சேர்ந்த இந்து அமைப்புகள், திப்பு சுல்தான், தேசத்துக்கு எதிராக செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டிவருகின்றன. பாடபுத்தகங்களில் திப்பு சுல்தான் வரலாறை நீக்க வேண்டும் என்று, கோரிக்கைவிடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் திப்புசுல்தான், பிறந்த நாளை மாநில அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதை இந்து அமைப்புகள் மட்டுமின்றி, பாஜகவும் எதிர்த்தது. திப்பு குறித்து எதிர்மறை கருத்து உள்ளதால் அதை அரசு விழாவாக கொண்டாட கூடாது என்று பாஜக கோரிக்கைவிடுத்தது. முஸ்லிம்களை திருப்திப்படுத்த, திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாகவும், மக்களின் வரிப்பணத்தை அரசு வீண் செய்வதாகவும், விழா நடத்தினால் அதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. இருப்பினும், திப்பு சுல்தான் பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாடும் முடிவில் அரசு உறுதியாக இருந்தது. திப்பு சுல்தான், ஒரு சுதந்திர போராட்ட வீரர், எனவே, அவரது பிறந்த நாளை கொண்டாடுவதை யாரும் எதிர்க்க கூடாது என்று சித்தராமையா கோரிக்கைவிடுத்திருந்தார். இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் திப்பு ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடகு மாவட்ட தலைநகர் மடிகேரியில் கொண்டாட்டம் நடைபெற்றபோது, இந்து அமைப்பினர் எதிர்போராட்டம் நடத்தினனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவம் அரங்கேறியது. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தில் குடகு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குட்டப்பா, படுகாயங்களுடன் அதே இடத்தில் உயிரிழந்தார். ராஜு என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், திப்பு சுல்தான் பிறந்த நாளை தவறான தேதியில் கர்நாடக அரசு கொண்டாடிய தகவல் தற்போது பாஜகவால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 1750ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, பிறந்த திப்பு, 1799ம் ஆண்டு, மே மாதம் 4ம் தேதி போரில் இறந்ததாக வரலாற்றில் உள்ளது. ஆனால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தீபாவளி தினமான நேற்று திப்பு பிறந்த நாளை கொண்டாடியதில் உள்நோக்கம் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. விகிபீடியா உள்ளிட்ட பல இணையதளங்களிலும், திப்பு சுல்தான் பிறந்த தினம் இம்மாதம் 20ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment