பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்குள் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சாந்தகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கான உண்மையான காரணங்களை ஆராய வேண்டும் என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பீகார் தோல்விக்கு அனைவரும் காரணம் என்று கூறுவது ஒருவரும் அதற்கு பொறுப்பில்லை என்ற பொருளையே கொடுக்கிறது. தோல்விக்குப் பொறுப்பானவர்கள், தோல்விக்கான காரணங்களை மறு ஆய்வு செய்ய முடியாது. எனவே தோல்விக்கான உண்மையான காரணங்களை முற்று முழுதாக அலசி ஆராய்வதோடு, கட்சியின் கருத்தொருமித்தல் பண்பு சிதைக்கப்பட்டு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக ஆனது எப்படி என்பது பற்றியும் தீவிர மறு ஆய்வு தேவை என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: பீகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டிய தேவையில்லை. இது பற்றி பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பீகார் தோல்விக்கு பொறுப்பாக முடியாது. இதற்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இது குறித்து அறிக்கை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நான் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன். மகா கூட்டணி பீகார் வலுவடைந்துள்ளது. அங்கு நாமும் வலுப்பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டடைய வேண்டும்.
No comments:
Post a Comment