பொதுமக்கள் கோரிக்கை விடுக்காமலேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றி மதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாற்று சிறப்புமிக்க, மிகப்பெரிய வெற்றியைக் குவித்து, மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வரும் நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து, அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். கருணாநிதியின் பிரதிநிதியாக பாட்னா நகரத்திற்கு சென்று அவரை வாழ்த்தியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பு எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போலவே, சொன்னதைச் செய்து காட்டியுள்ள நிதிஷ் குமார் அவர்களை, நாட்டுக்கு வழிகாட்டக் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளமைக்காக தி.மு.க. சார்பிலும் கருணாநிதி சார்பிலும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். மதுவிலக்கு தேவை என்ற கோரிக்கை அங்குள்ள எதிர்க்கட்சிகள் முன்வைக்காத நிலையிலும்கூட, நிதிஷ்குமார் அரசு மக்களின் தேவையை அறிந்து இந்த பாராட்டத்தக்க முடிவை எடுத்துள்ளது. வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தபோதிலும்கூட, மதுவின் மூலம் கிடைக்கும் மூலம் கிடைக்கும் வருவாயே மிகவும் முக்கியமானது என்று அதிமுக ஆட்சியாளர்களைப் போன்று விதண்டாவாதம் செய்யாமல், மக்கள் நலனே முக்கியம் என்று முன்னோடியான முடிவை எடுத்திருக்கிறது. தியாகி சசிபெருமாள் போன்றவர்கள் உயிரைத் துறந்தும், மதுவிலக்கு தேவை என்று தமிழ்நாட்டின் கட்சிகளும் இயக்கங்களும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தாலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமல் அதிமுக அரசின் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்கிறது. மதுக்கடைகளை மூடுமாறு போராடும் மாணவர்கள் மீது தடியடி, மக்கள் மன்றத்தில் பரப்புரை மேற்கொள்ளும் பாடகர் கோவன் மீது தேசத்துரோக வழக்கு, சிறை என ஜெயலலிதா அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. "பரம ஏழைகளே மதுவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குடும்ப வன்முறையால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குழந்தைகளின் கல்வி பாழாகிறது. குற்றங்கள் பெருகுகின்றன" என மதுக்கடைகளை மூடுவதற்கு நிதிஷ்குமார் கூறியுள்ள காரணங்கள் ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியவை. தமிழகத்துக்கும் அப்படியே பொருந்துபவை. ஆனால் இங்குள்ள முதல்வர் ஜெயலலிதாவின் செயல்படாத ஆட்சியோ தமிழகத்துக்குத் தலைக்குனிவைத் தேடித் தந்து கொண்டிருப்பததோடு தங்களின் சொந்த நலனையும், லாபத்தையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நான் மேற்கொண்டு வரும் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்திலும், இதே காட்சிகளைக் கண்கூடாகக் கண்டேன். மதுக்கடைகளை மூடுங்கள் என பெண்களும் மாணவச் செல்வங்களும் மன்றாடுகின்றனர். "நமக்கு நாமே" பயணத்தில் பெற்றுள்ள நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களில் "மதுவிலக்கை அமல்படுத்துங்கள்" என்ற தாய்மார்களின் கோரிக்கை தான் அதிகம். அவர்களின் உணர்வை மதிக்கும் வகையில், திமுக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்தே மதுக் கடைகளை மூடுவது தான் என்று இதயசுத்தியோடு உறுதி அளித்து வருகிறேன். ஓராண்டுக்கும் மேலாக மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரேயொரு முறைகூட, ஒற்றைச் சொல்லைக்கூட கூறாமல் அலட்சியப்படுத்தி வருவது, மக்கள் நலனிலும் அவர்களுக்கு அக்கறை இல்லை, ஜனநாயகத்தின் மீது துளியும் மதிப்பு இல்லை என்பதையே வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, பெரும் சமூகத் தீமையாக மாறியுள்ள மதுக்கடைகளை மூடுவதில் பீகார் அரசு காட்டும் பாதையை நோக்கி ஜெயலலிதா, நிதீஷ் குமாரை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment