Latest News

தமிழ் மீது காதல் கொண்ட ஜப்பானிய நோபுரு கரஷிமா காலமானார்


ஜப்பானிய தமிழறிஞர்,பேராசிரியர் நோபுரு கரஷிமா, நேற்று ஜப்பானில் காலமானார். அவருக்கு வயது 82. தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர் நோபுரு கரஷிமா. டோக்கியோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், கிழக்காசிய வரலாற்றுத் துறையில் ஆய்வு அறிஞராகவும் இருந்தார். உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989 முதல் 2010 வரை செயலாற்றினார். தமிழ்நாட்டின் மொழி, சமூக மற்றும் பண்பாடு தொடர்பாக ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதியுள்ளார்.

தொடக்க காலம் முதல் மத்திய காலம் வரையிலான தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். இவரது வரலாற்று ஆய்வையும் சேவையையும் பாராட்டி, இந்திய அரசு, 2013ல், பத்மஸ்ரீ விருதை வழங்கியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் சென்றிருந்த போது உடல்நலம் குன்றியிருந்த பேராசிரியர் கரஷிமாவை சந்தித்து பத்மஸ்ரீ விருதை வழங்கினார். கரஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர். ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் புகழ் பெற்ற தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம், அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம்.

தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலைபெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர் கரஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. சோழர் கால கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர், கல்வெட்டுகள் குறித்த சொல் அகராதி முதலிய நூல்களை எழுதியுள்ளார். கரஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம். 1995ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். கடந்த, 2010ல், கோவையில் நடைபெற்ற, 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அரசியல் தலையீடு அதிகமிருப்பதாக கருதிய இவர், அம்மாநாட்டை புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.