தன் வீட்டில் புகுந்த சிறுத்தையை, இருட்டில் பூனை என எண்ணி அதன் வாலை பிடித்து விரட்டிய கிராமவாசி உயிர் தப்பினார். உத்தரப் பிரதேசத்தின் பரிதாபத் மாவட்டத்தில் உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிலால் நகரின் வளையல் தொழிற்சாலையில் பணியாற்றும் கிராமவாசி வசீம் அகமது. இவர், நேற்று இரவு வழக்கம் போல் தன் பணியை முடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். ஒரே ஒரு அறை கொண்ட அந்த வீட்டில் மின்விளக்கும் இல்லாததால், விளக்கை ஏற்றினார்.
அப்போது, விளக்கின் ஒளியில் அறையின் மூலையில் நீண்ட வாலுடன் ஒரு விலங்கு அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறார். அது, பெரிய அளவிலான பூனை எனக் கருதியவர் அதன் வாலை பிடித்து அசைத்து வெளியே போகும்படி விரட்டியுள்ளார். இதனால், கோபம் அடைந்த சிறுத்தை வசீமை நோக்கி கர்ஜிக்க அதன் பிறகு அது ஒரு சிறுத்தை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ந்த போன வசீம் அந்த அறையை சாத்தி விட்டு வெளியில் ஓடி வந்திருக்கிறார்.
இவரது அலறலை கேட்டு அங்கு கிராமவாசிகள் கூடி விட்டனர். பிறகு உபி மாநில வனவிலங்குத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் எனும் பொதுநல அமைப்பின் உதவியை நாடினர். அவர்கள் வந்த பின் சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தி அது யாரையும் தாக்காதபடி பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் அமைப்பின் விலங்குகளின் மருத்துவரான இளையராஜா கூறுகையில், ‘இந்த பகுதிவாசிகள் பலர் தம் வீட்டில் மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லாமையால் அதை பூட்டி வைப்பதில்லை. இதனால், அருகில் இருந்த காடுகளில் இருந்து தப்பி வந்த சிறுத்தை வசீம் வீட்டில் புகுந்துள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அதை சில நாள் கண்காணித்த பின் மீண்டும் காட்டில் கொண்டு போய் விட்டு விடுவோம். விலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் பிரச்சனை மற்றும் இரை பற்றாக்குறை காரணமாக சில வருடங்களாக இது உ.பி.யில் அதிகமாகி விட்டது’ எனக் கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. இதன் அருகிலுள்ள மீரட் நகரில் கடந்த பிரவரியில் புகுந்த ஒரு சிறுத்தை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேரை தாக்கி இருந்தது. இதன் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்ததும் நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment