ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கட்டண மீட் டர்கள் வெறும் காட்சிப் பொருளாக உள்ளன.
சென்னையில் தற்போது பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் போட்டுக்கொண்டு ஓட்டினாலும், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60 என பேரம் பேசி வசூலிக்கின்றனர். சிலர் மீட்டர் கட்டணத்துடன் சேர்த்து ரூ.10 வரை கூடுதலாக கேட்கிறார்கள். ஏற்கெனவே ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்கள் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றன.
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, ‘‘பண்டிகை மற்றும் மழைக் காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதை முறைபடுத்தவில்லை. இதனால், ஆட்டோக்களில் அன்றாடம் பயணம் செய்யும் மக்கள் அவதிப்படுகின்றனர். பண்டிகை நாட்களில் முக்கிய இடங்களில் ஆட்டோக்களிலும் சோதனை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும், சில இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை நீடிக்கிறது.
காலிப் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகள் தீவிரப்படுத்தப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment