Latest News

டெல்லி கலாம் வீட்டை அறிவுசார் மையமாக்க மத்திய அரசு மறுப்பு- பா.ஜ.க.வில் இருந்து அண்ணன் மகன் விலகல்!!


மறைந்த மக்கள் குடியரசுத்தலைவரான டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் மகன் ஹாஜா சையது இப்ராஹிம் பா.ஜ.க கட்சியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். "ராமேஸ்வரத்தில் இருந்த போது, மக்களுக்காக நிறைய பொது சேவை செய்துள்ளேன். அந்த பொது சேவை இனியும் தொடர ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினேன். என் எண்ணங்களையும், தாத்தாவின் லட்சியங்களையும் செயல்படுத்தும் இயக்கமாக, பா.ஜ.க தான் தெரிந்தது" என்று கூறி கட்சியில் இணைந்த ஹாஜா சையது இன்று அக்கட்சியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

முன்னதாக கலாம் இறந்ததும் அவர் தங்கியிருந்த ராஜாஜி சாலையில் உள்ள 10 ஆம் எண் அரசு இல்லத்தை "அறிவு மையமாக மாற்ற வேண்டும் என்றும், நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரி வந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளை எல்லாம் புறக்கணித்த மத்திய அரசோ, கடந்த அக்டோபர் மாதம் அந்த வீட்டில் இருந்த அப்துல் கலாமின் புத்தகங்கள், அவரது இசைக் கருவியான வீணை உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தது. மேலும், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கலாம் தங்கியிருந்த அரசு இல்லத்தை, "நான் குர்-ஆன் மற்றும் பைபிள் நூல்களை மதிக்கிறேன். ஆனால், அது இந்தியாவின் ஆன்மாவுடன் ஒத்துப்போவதில்லை. ராமாயணமும், மகாபாரதமும்தான் இந்திய ஆன்மோவோடு ஒத்துப்போகின்றன" என்று கூறிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாக்கு ஒதுக்கீடு செய்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியோ, இது அப்துல் கலாமை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறியது. ஆனால் தற்போது அந்த இல்லத்தில் மகேஷ் சர்மாவே வசிக்கிறார். இந்நிலையில் இந்த அதிரடி முடிவு குறித்து ஹாஜா சையது வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், இளைய சமூகத்தினர், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் என்னிடம், அப்துல் கலாம் தங்கியிருந்த இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றாததால் பா.ஜ.கவிலிருந்து விலகி விடுமாறு பரிந்துரைத்தனர். கலாமின் மீதிருந்த ஆழமான அன்பின் காரணமாக அவர்கள் இப்படிச் செய்ய வற்புறுத்தினர். எனவே, அவர்களின் பரிந்துரையை ஏற்று கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து விலகி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன். இனிமேல் அமைதியாக தனித்தே எனது பொது சேவையை தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார். 

பேரன் ஷேக் சலீம் மறுப்பு: இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் வழிப் பேரனான ஷேக் சலீம்தான் பா.ஜ.கவிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற தவறான தகவல் பரவியது. இதனையடுத்து அவர், பாஜகவிலிருந்து விலகியது நானல்ல... ஊடகங்கள் குழப்பத்தில் என்னுடைய பெயரையும், புகைப்படத்தினையும் வெளியிட்டு விட்டன என்று மறுப்பு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.