Latest News

ஆளுநருக்காக மாதம் ரூ.30 லட்சம் செலவு செய்யும் கர்நாடக அரசு! ஆர்.டி.ஐயில் அதிர்ச்சி தகவல்


மசாஜ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு மாதம் ரூ.30 லட்சத்தை கர்நாடக அரசு செலவிட்டுவரும் தகவல் ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது. ஆர்.டி.ஐ மூலம் எடுக்கப்பட்ட அந்த தகவல்கள் 'ஒன்இந்தியாவிடம்' உள்ளது. கர்நாடக மாநில ஆளுநராக பாஜகவை சேர்ந்த வஜுபாய் வாலா பணியாற்றி வருகிறார். மோடி அரசு மத்தியில் பதவிக்கு வந்த பிறகு வஜுபாய் வாலாவுக்கு, இப்பதவி வழங்கப்பட்டது.

பொதுவாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுகிறது. அப்படி ஆளுநர் பதவிக்கு வருவோர், 'அரசியல் சாசனத்தின் பாதுகாவலர்' என்ற அம்சத்தையும் தாண்டி, அநாவசிய செலவுகள் பலவற்றை செய்வதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாவதுண்டு. கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், பெங்களூரை சேர்ந்த ஆர்டிஐ போராளி நரசிம்மூர்த்தியால் எடுக்கப்பட்ட தகவல் 'ஒன்இந்தியாவிடம்' உள்ளது. அந்த தகவலை பாருங்கள்: ராஜ்பவனில் மொத்தம் 17 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.14,500 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆளுநருக்கு மசாஜ் செய்ய, 5 பேர் கொண்ட குழு உள்ளது. அவர்களுக்கும், மாதம் தலா ரூ.14,500 சம்பளமாக வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திலும், பக்கத்திலுள்ள பிற அலுவலகங்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்க ஒரு மெசேஞ்சரை பணிக்கு வைத்துள்ளது ராஜ்பவன். சைக்கிளில் சென்று கடிதம் கொடுக்கும் அவருக்கு மாத சம்பளம் ரூ.21 ஆயிரம்.

ராஜ்பவனுக்கென்றே பிரத்யேக பெயிண்டர், கார்பெண்டர் மற்றும் துணி துவைக்கும் தொழிலாளிகள் 7 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் மொத்த சம்பளம் ரூ.1,30,950 ஆகும். ஆளுநருக்காக அவச தேவைகளுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணத்துவம் கொண்ட டாக்டர் (சம்பளம் ரூ.50100), நர்ஸ் (32000), ஆண் நர்ஸ் (14550) மற்றுமொரு பெண் நர்ஸ் (14500) ஆகியோர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆளுநர் சொல்வதை குறிப்பெடுக்கும் ஸ்டெனோவுக்கு சம்பளம் ரூ.29,600 எனவும், அதை டைப் செய்பவருக்கு ரூ.21 ஆயிரம் எனவும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டைப்பிஸ்டுக்கும், சைக்கிளில் கடிதம் கொண்டு செல்பவருக்கும் ஒரே சம்பளம் என்பது இதில் சிறப்பு. ராஜ்பவனில் மட்டும் மொத்தம், 161 பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இதன்மூலம், கர்நாடக அரசின் கருவூலத்தில் இருந்து மாதம் சுமார் ரூ.30 லட்சம் செலவாகிறது. இதுகுறித்து நரசிம்மூர்த்தி கூறுகையில், "மன்னர் காலத்தில் பெரிய பதவிகளில் இருந்தோருக்கு அளிக்கப்படுவதை போன்ற முக்கியத்துவமும், செலவீனமும், மக்கள் ஆட்சி நடைபெறும் இக்காலகட்டத்திற்கு தேவையில்லை" என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.