Latest News

மீண்டும் கடலூரைச் சூழ்ந்த வெள்ளம்.. மக்களை மீட்கும் பணியில் நேரடியாக குதித்த ககன்தீப் சிங் பேடி


ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்த கடலூர் மாவட்டத்தில் மறுபடியும் வெள்ளக்காடாகியுள்ளது. விடிய விடிய கொட்டிய அடை மழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார், சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு, விட்டு பலத்த மழையாக பொழிந்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 36 மில்லி மீட்டர், கடலூரில் 30.60 மி.மீ., வானமாதேவியில் 30 மி.மீ. மழையும் பெய்தது. ஒட்டு மொத்தத்தில் மாவட்டத்தில் சராசரியாக 12.85 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும், சுவர் இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் நேற்று முன்தினம் வரை 68 பேர் பலியாகி இருந்தனர். மாவட்டத்தில் நேற்றும் பலத்த மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கியும், சுவர் இடிந்தும், மின்னல் தாக்கியும் என மேலும் 4 பேர் பலியானார்கள். கோமுகி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சுரேஷ் குமார், எஸ்.பி. விஜயக்குமார் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று மீட்புப் பணிகளில் அதிகாரி பேடி ஈடுபட்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.