பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை வைப்பதற்கு பதிலாக திப்பு சுல்தான் பெயரை வைத்திருக்க வேண்டும் என்று கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒக்கலிக (கெளடா) ஜாதி சங்கத்தினரும், பாஜகவும் கிரீஷுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில், தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மைசூர் மாகாணத்தை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான், பிறந்த தினத்தை இவ்வாண்டு முதல், அரசு விழாவாக கொண்டாட கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், குடகு மாவட்டம் மடிகேரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அம்மாவட்ட தலைவர் குட்டப்பா உயிரிழந்தார்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, பெங்களூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய கன்னட எழுத்தாளரும், நடிகருமான (ரட்சகன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர்) கிரீஷ் கர்னாட், "பெங்களூரை உருவாக்கி, ஆட்சி செய்த கெம்பேகவுடா பெயரை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளனர். ஆனால், அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் கிடையாது. திப்புசுல்தான் சுதந்திர போராட்ட வீரர். எனவே அவரது பெயரைத்தான் சூட்டியிருக்க வேண்டும். திப்பு சுல்தான், முஸ்லீமாக இல்லாமல் இந்துவாக இருந்திருந்தால், மராட்டிய மன்னன் சிவாஜி போன்ற நற்பெயரை பெற்றிருப்பார்" என்று தெரிவித்தார். கர்னாட் பேச்சுக்கு பாஜக மட்டுமில்லாமல், கெம்பேகவுடா சார்ந்த ஒக்கலிகர் சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தின. ஒக்கலிகர் சமூகத்தினர் அரசியல், சமூக அமைப்புகளில் செல்வாக்குடன் உள்ளவர்கள் என்பதால் போராட்டம் தீவிரமடைந்தது.
எழுத்தாளர், கல்புர்கிக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கு ஏற்படும்.. என்று கூறி மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் கர்னாடுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கர்னாட் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், போராட்டங்களுக்கு பணிந்த கர்னாட், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இனிமேல் விமான நிலைய பெயரை மாற்ற முடியாது என்று எனக்கும் தெரியும். இருப்பினும் எனது ஆசையைத்தான் நான் கூறினேன் என்று கர்னாட் விளக்கம் கொடுத்துள்ளார். கர்னாட் கெம்பேகவுடா பற்றிய கருத்து கூறியபோது, விழாவில் பங்கேற்ற முதல்வரோ அல்லது அமைச்சர்களோ அதற்கு மறுப்பு கூறவில்லை என்பதால், கர்னாட் அரசின் குரலாகவே ஒலித்துள்ளார் என்பது உறுதியாகிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக, இரு சமூகங்கள் இடையே பிரச்சினையை தூண்டிவிட்டு கர்நாடக காங்கிரஸ் அரசு குளிர்காய்வதாக பாஜகவை சேர்ந்த ஒக்கலிக ஜாதியை சேர்ந்தவரும், முன்னாள் துணை முதல்வருமான அசோக் குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment