பீகார் தேர்தல் தோல்விக்கு உரிய விளக்கத்தை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தரமறுத்தால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சி எம்.பி. போலாசிங் கொந்தளித்துள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சாந்தகுமார் ஆகியோர் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அமித்ஷாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி. போலா சிங் கூறியதாவது: பா.ஜ.க.வில் சில மூத்த தலைவர்கள் தாங்களாகவே அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். அவர்கள்தான் பீகார் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று விளக்கம் கூற வேண்டும். இதை ஏற்க மறுத்தால் அவர்கள் பதவி விலக வேண்டும். யாருங்க இந்த அமித்ஷா? அவரும் பிரதமர் மோடியும் மட்டுமே அனைத்து அதிகாரங்களையும் தம் வசம் வைத்துள்ளனர். பா.ஜ.க.வுக்குள் புற்றுநோய் முழுமையாக பிடித்துள்ளது. அதை முதலில் நீக்க வேண்டும். பிரதமர் மோடி லாலு, அவரது மகள் மற்றும் நிதிஷின் மரபணு குறித்தெல்லாம் விமர்சித்தார். பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என அமித்ஷா பேசினார்.. இத்தகைய பேச்சுகளுக்கான தேவை என்ன வந்தது? இவ்வாறு போலாசிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment