தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தால் தமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த 9ம் தேதி கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந் நிலையில் இந்த காற்றழுத்தத் தாழுவு நிலை தமிழக நிலப்பகுதியில் பயணித்து வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மறைந்து விட்டது. ஆனாலும் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களி்ன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. லட்சத்தீவு நோக்கி நகர்ந்த சுழற்றி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் எனவும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செய்யாறு பகுதிகளில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment