ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 73 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என சைல்டு லைன் இயக்குநர் தெரிவித்தார்.
சைல்டு லைன் அமைப்பு ஆண்டு தோறும் குழந்தைகள் தினமான நவ.14 முதல் ஒரு வாரத்துக்கு ‘சைல்டு லைன் உங்கள் நண்பன்’ என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்துகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் 20-ம் தேதி வரை குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கு குழந்தைகள் ‘உங்கள் நண்பன்’ என்ற அட்டையை நேற்று அணிவித்தனர்.
பின்னர் ராமநாதபுரம் சைல்டு லைன் இயக்குநர் எஸ்.கருப்பசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சைல்ட்லைன் மூலம் 73 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 25 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளி இடைநின்ற குழந்தைகள் 93 பேர், பிச்சையெடுக்கும் குழந்தைகள் 24 பேர், காணாமல்போன குழந்தைகள் 5 பேர், பாலியல் வன்முறையால் பாதிக் கப்பட்ட 15 பேர், ஆற்றுப்படுத்தப்பட்ட குழந்தைகள் 10 பேர், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் 25 பேர், கல்வி உதவித்தொகை தேவைப்படும் குழந்தைகள் 71 பேர், காப்பக வசதி தேவைப்படும் 16 பேர் என 482 தலையீடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம் என்பவரின் 4 மாத பெண் குழந்தை சன்விகா, மெய்யனேந்தலைச் சேர்ந்த நாகநாதன் மகள் பிரியதர்ஷினி(13) ஆகியோருக்கு, இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டில் 123 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜி.அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆர்.சகுந்தலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Keywords: 73 குழந்தை திருமணங்கள், நிறுத்தம், சைல்டு லைன், இயக்குநர், தகவல்

No comments:
Post a Comment