வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தமிழ்நாட்டில் வெங்காயம் விலை கடந்த 50 நாட்களாக அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இப்போது 500 சதவீதம் விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகளும் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சென்னையில் ஒரு கிலோ துவரம் பருப்பு 175 ரூபாய்க்கும், உளுத்தம்பருப்பு 165 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் தங்களது உணவில் பருப்பும், வெங்காயமும் சேர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் விலை உயர்ந்ததற்கு அவற்றின் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது உண்மை தான் என்ற போதிலும், பதுக்கலும் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பருப்பு வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. விளைச்சல் குறைவு என்றால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் விலை இருக்கும். ஆனால், சென்னையில் மட்டும் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் சென்னையில் பருப்பு வகைகள் அதிகமாக பதுக்கப்படுவது தான். வெங்காயத்தின் விலையும் மற்ற நகரங்களை விட சென்னையில் மிக அதிகமாக இருப்பதற்கு பதுக்கல் தான் காரணமாகும்.
பொதுவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்போது, அவற்றின் பதுக்கலை கட்டுப்படுத்துவது, நியாயவிலைக் கடைகளில் அதிகமாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக நியாயவிலைக்கடைகளில் அனைவருக்கும் முறைப்படி பருப்பு வழங்கப்பட்டிருந்தாலே வெளிச்சந்தையில் பருப்பு விலை வீழ்ச்சியடைந்து இருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு தவறிவிட்டது. வெளிச்சந்தையில் பருப்புவிலையை கட்டுப்படுத்துவதாக கூறி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சில்லறை விற்பனைக்கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு 107 ரூபாய்க்கும், முதல் ரக உளுத்தம்பருப்பு 112 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 99 ரூபாய்க்கும் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இப்போது அந்த கடைகளில் இந்த விலையில் பருப்புகள் விற்கப்படுவதில்லை. பண்ணைப் பசுமைக்கடைகளில் வெங்காயம் சற்று குறைந்த விலையில் விற்கப்படும் போதிலும், அத்திட்டத்தால் ஒரு சிறிய குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயனடைகின்றனர். தமிழக அரசின் இப்போக்கால் வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஏழை, நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் போய்விடும். எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலை தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறினார்.
No comments:
Post a Comment