அமெரிக்காதான் அல்கொய்தாவை உருவாக்கியது என்றூம், அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல்கொய்தாவை உருவாக்கினர் என்றும் இந்தியாவிற்கான சிரிய தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமல் அப்பாஸ், சில ஆண்டுகளுக்குள் ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்தது எப்படி? என்று தனியார் செய்தி இதழ் கேட்டுள்ள கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள தூதர் ரியாத் கமல் அப்பாஸ், “ ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவை உருவாக்கியது யார்? ஏன்? என்று எனக்கு சொல்லுங்கள். அரபு நாடுகளின் உதவியுடன், அமெரிக்காதான் அல்கொய்தாவை உருவாக்கியது என்பது தெளிவான விஷயம்.
ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை முறியடிக்க அவர்கள் விரும்பினார்கள். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர்திரும்பிக் கொண்டிருந்தன. சில ஆண்டு போருக்குப் பிறகு ராணுவ வீரர்களை பயன்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது.
எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவும், உதவியும் அளிப்பது சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ”தற்போது ஐ.எஸ். அமைப்பினர் ஏன் வலுவாக உள்ளனர் என்றால், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா உண்மையிலேயே சண்டையிடவில்லை. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment