சட்டப்பேரவை கூட்டம் 9 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த கூட்ட தொடர் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், கடந்தவாரம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்காக கடந்த 5ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை உள்பட 13ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்காக, கடந்த 4ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரின் போது, தொடர்ந்து 9 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறாததால், அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் இதற்காக தனி தீர்மானம் கொண்டு வந்து, பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடுகள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வருவாய் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் அளித்து பேசி, அறிவிப்புகளை வெளியிடுவார்கள். வரும் 29ம் தேதி வரை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் கூட்ட தொடரில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெற்ற தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். அதேவேளையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், கடந்த 4 ஆண்டுகளில் வராத முதலீடு, 2 நாட்களில் வந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிகிறது. அதேபோல, தமிழகத்தில் மூடப்பட்ட நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் குறித்தும் சேஷசமுத்திரம் கலவரம் குறித்தும் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும், திமுக சார்பில், சட்டம் ஒழுங்கு பிரச்னை, சேஷசமுத்திரம் கலவரம், மதுவிலக்கு உள்ளிட்ட 24 விவகாரங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், சபாநாயகர் இது தொடர்பாக இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளனர். எனவே, கடந்த 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மீண்டும் காரசாரமாக தொடங்கவுள்ளது.
No comments:
Post a Comment