1950 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 437 ல் 306 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்குவது குறித்து மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை வழங்கியது. இந்த பரிந்துரையில் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தில் 1950 -ல் இருந்து தற்போது வரை குடியரசுத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருணை மனுக்களின் எண்ணிக்கை அடங்கிய ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 437 கருணை மனுக்கள் மரண தண்டனைக்கைதிகளால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டுள்ளன. அவற்றில் 306 கருணை மனுக்கள் அடுத்தடுத்து வந்த குடியரசுத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. 147 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1950-1982 ஆம் ஆண்டு கால கட்டங்களில் ஆறு குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இந்த காலத்தில் ஒரே ஒரு கருணை மனு மட்டுமே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 262 கருணை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது பதவி காலத்தில் 181 கருணை மனுக்களில் ஒரே ஒரு மனுவை மட்டுமே நிராகரித்துள்ளார். மீதமுள்ள 180 மனுக்களையும் அவர் ஏற்று ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் தனக்கு வந்த 57 கருணை மனுக்களையும் ஏற்று தண்டனையை குறைத்துள்ளார். குடியரசுத் தலைவர் பக்ரூதின் மற்றும் அலி அகம்மது ஆகியோர் எந்த ஒரு கருணை மனு மீதும் முடிவெடுக்கவில்லை என்று அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment