கூகுள் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற கூகுள் தேடல் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, சென்னை தமிழர் சுந்தர்பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ள உலகளாவிய கவுரவமாக கருதப்படுகிறது. இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மற்றும், தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது... கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் போட்டி அதிகரித்துள்ள சூழலில், திறமையாலும், கடின உழைப்பாலும் இவ்வளவு உயர்ந்த இடத்தை பெற்று இருப்பது தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. மாநிலத்தின் இளைஞர்களுக்கு ஒரு மகத்தான எடுத்துக்காட்டை உருவாக்கிவிட்டீர்கள். தமிழக மக்களின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் உங்கள் உயர்வுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, உங்களின் புதிய பதவியில் எல்லா வெற்றிகளையும் அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment