சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தமது தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தெளிவாகவே இருப்பதால் தாம் உட்பட 4 பேரையும் விடுதலை செய்தது சரியே என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்று கொண்டது. மேலும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியசாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்று கொள்ளபட்டது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் நீதிபதிகள் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இதனடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், சொத்து குவிப்புவழக்கில் சட்டரீதியான எந்த கேள்வியும் எழவில்லை; நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது; வழக்கில் இருந்து 4 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment