பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இத்தேர்தல் முடிவுகள் சித்தராமையா தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படும். பெங்களூரு மாநகராட்சியிலுள்ள 198 வார்டுகளில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள, ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் 197 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 49.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெங்களூரு நகரில் உள்ள 27 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் கர்நாடக ஆயுதப்படை போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் மையங்கள் முன்பாக பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணிவரை பெங்களூர் நகரில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெறும் என்று தெரியவந்துள்ளது. அதேநேரம் அறுதி பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்பதால் தேவகவுடாவின் மஜத ஆதரவை பெற்றே ஆட்சியமைக்க முடியும் என்றும் அவரை தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு சுமார் 90 வார்டுகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், பாஜகவுக்கு 75 முதல் 80 வார்டுகளில் வாய்ப்பு உல்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment