தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அந்த கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எதுவும் நடத்தாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. பொதுவாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறும்.
னால் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் சட்டசபை கூட்டம் கூட்டப்படவே இல்லை. இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மே 23-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை. இதன் பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதனைத் தொடர்ந்தும் சட்டசபை கூட்டப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபை கூட்டப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது.
உற்சாக வரவேற்பு
சட்டசபைக்கு முதல்வர் ஜெயலலிதா வருகை தந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று மேஜையை பலமாக தட்டி உற்சாக வரவேற்பளித்தனர். இதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார்.
இரங்கல்
இதனைத் தொடர்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சரான செந்தூர் பாண்டியன், இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார்.
ஒத்திவைப்பு
அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு சட்டசபை நடவடிக்கைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
No comments:
Post a Comment