டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 2 நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு அமலாக்கப் பிரிவு திடீரென சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாடு வாழ் தொழிலதிபரான சிவசங்கரனின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே ஏர்செல் நிறுவனத்தில் ரூ4,000 கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலை 2005ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தர வேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனே ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் இருந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கைமாறின. பின்னர் 2006ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில் இந்த பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாகின. இப்படி கடைசி நேரத்தில் ஏர்செல் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறியதே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சில நிறுவனங்களுக்கு தான்; மேக்சிஸ் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் அனுமதி கொடுத்ததே தமது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயமடையத்தான் என்பது பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நீண்டகால புகார். இந்த புகாரை ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான 2012ஆம் ஆண்டு கேள்வி எழுந்த போது ப.சிதம்பரம், என் நெஞ்சில் வேண்டுமானால் குத்துங்க.. நேர்மையை சந்தேகிக்காதீங்க என உருக்கமுடன் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஆதாயமடைந்தது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 2 நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு அமலாக்கப் பிரிவு திடீரென சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரம்தான் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. திடீரென சொத்து குவிப்பு வழக்கை போட்டு சோதனைகளை மேற்கொண்டது. தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பக்கம் அமலாக்கப் பிரிவு பார்வையை திருப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment