மும்பை/ டெல்லி: சீனா பங்குச் சந்தை வீழ்ச்சியால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று மிகவும் பயங்கரமான வீழ்ச்சியை எதிர்கொண்டது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில் 1,624 புள்ளிகள் சரிவை கண்டது. இந்திய பங்குச் சந்தையில் இது 3வது மோசமான வீழ்ச்சி. பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே கடும் சரிவு நிலவியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் 1,624 புள்ளிகள் சரிவுடன் 25,741 என்ற குறியீட்டெண்ணுடன் இருந்தது.
தேசிய பங்குச்சந்தை நிப்டியும் வர்த்தக முடிவில் 491 புள்ளிகள் சரிவை கண்டது. இது முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும் இது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து ரூ.66.50 எனும் நிலையை அடைந்தது. கடந்த சில வாரங்களாக சீனாவின் பணமான யுவான் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதும் ரூபாயின் மதிப்பில் கடும் சரிவை ஏற்படுத்தி உள்ளது
No comments:
Post a Comment