Latest News

  

திமுக உடன் கூட்டணியில்லை…. அறிவித்த மதிமுக, தேமுதிக… யாருடன் கூட்டணி?


சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணியில்லை என்று தேமுதிக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மதிமுகவும் திமுக உடன் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்திவிட்டது. முக்கிய கட்சிகளின் இந்த முடிவு திமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 2016ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் முதல் கட்ட வேலைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது.

அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரிகள் என 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனித்து களமிறங்கும் பாமக 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்துள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க.வினர் நிலை இன்னமும் உறுதியாகவில்லை.

ஆட்சியில் பங்கு ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரிகள் கொண்ட 5 கட்சி கூட்டணி, ‘‘ஆட்சியில் பங்கு'' என்ற கோஷத்தை எழுப்புவது திமுகவை எரிச்சல் படுத்துகிறது.

காங்கிரஸ் கோஷம் திமுகவின் தோளில் குதிரையேறி சில பல சீட்டுகளை ஜெயித்து வரும் காங்கிரஸ் கட்சியோ, துணைமுதல்வர் பதவி, காவல்துறை அமைச்சர் பதவி என்ற கோஷத்தை முன்வைத்துள்ளது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்த ஸ்டாலினோ, கூட்டணிக்கு வெற்றிலை பாக்கு வைத்து யாரையும் அழைக்கவில்லை என்று பட்டென கூறிவிட்டு நடைபயணத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார்.

திமுக உடன் கூட்டணியில்லை இதனிடையே தே.மு.தி.க.வும், ம.தி.மு.க.வும் தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய நிலைப்பாடு ஒன்றினை அறிவித்துள்ளன. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று தே.மு.தி.க.வும், ம.தி.மு.க.வும் அறிவித்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளன.

பிரேமலதா அதிரடி திருச்சியில் பேசிய பிரேமலதா, 2011 தேர்தலின் போது சேலம் மாநாட்டில் தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். இனி அந்த தவறை செய்யமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க. உடன் இனி கூட்டணி கிடையாது. அவர்களுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருக்கும். வரும் 2016 தேர்தலில் தே.மு.தி.க. ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கும் என்று தடாலடியாக அறிவித்தார்.

வைகோவின் அறிவிப்பு கோவில்பட்டியில் பேசிய வைகோவோ, அ.தி.மு.க.-தி.மு.க. பங்கேற்காத, தலைமையேற்காத ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் ஏக்கத்தில் உள்ளனர். இதை அமைக்க போவது மக்கள் நலக்கூட்டு இயக்கம் தான். இதன் மூலம் அ. தி.மு.க.- தி.மு.க இல்லாத புதிய ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார்.

நெருக்கும் 2ஜி ஊழல் வழக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு திமுகவை நெருக்கி வருகிறது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் வேறு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊழலுக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக கூறப்படும் தேமுதிக எப்படி ஊழல் கட்சியான திமுக உடன் கைகோர்க்கும் என்று கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தயாராகி வரும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கு முன்னதாகவே தேர்தல் அறிக்கை, சுற்றுப்பயணம் என விறுவிறுப்பாக பணிகளை தொடங்கிவிட்டது திமுக. கொங்கு மண்டலத்திலும், வட மாவட்டங்களிலும் எதிர்கட்சிகளை சமாளிக்க தேமுதிக கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என மனநிலையில் இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அதற்கு தடை போடும் விதமாகவே தேமுதிக உறுதியாகவும், இறுதியாகவும் தனது முடிவினை அறிவித்துவிட்டது.

திமுகவை வீழ்த்த கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றவே அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தேமுதிக. ஆனால் அதிமுக உடன் கூட்டணியில் இருந்த மதிமுகவோ கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டதோடு தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

அரசியல் களம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக என அணிகள் இணைந்தன. திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அநாதையாக விடப்பட்ட காங்கிரஸ் வேறு வழியின்றி தனித்து போட்டியிட்டது. இதுவே அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், மதிமுக, விசிக உள்ளிட்ட 5 கட்சிகள் ஒரு அணியிலும், பாஜக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இம்முறையும் அதிமுகவிற்கே சாதகமாக அமையும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.