எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் வெங்காய விலை சற்றுக் குறைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வெங்காயம் கிலோ ரூ. 100க்கு கூட விற்கப்பட்டது. டெல்லியில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க டெல்லி அரசே ரூ.40-க்கு அடக்க விலை விற்பனையைத் தொடங்கியது.
கோயம்பேட்டில் ரூ. 70... சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.70க்கும், சில்லறை விற்பனையில் ரூ.80க்கும், ஜாம்பஜார் போன்ற சில்லறை மார்க்கெட்களில் தரத்துக்கேற்ப ரூ.100க்கும் விற்கப்பட்டது.
திடீர் விலை குறைவு... இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெங்காய விலை திடீரென குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.40க்கும், சில்லறை விற்பனையில் ரூ.60க்கும், ஜாம்பஜாரில் ரூ.60க்கும் வெங்காயம் விற்கப் பட்டது.
எகிப்து வெங்காயம் வந்துருச்சாம்... இந்த திடீர் விலை குறைவுக்கு காரணம், இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து நாட்டு வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்திருப்பது தான் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாசிக்குக்கு வந்த எகிப்து வெங்காயம்... கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாஸல்கான் சந்தைக்கு எகிப்திலிருந்து 90 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதில், 20 டன் வெங்காயம் கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.
விளங்காத பாகிஸ்தான் வெங்காயம்... இதற்கு முன்பு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அவற்றிற்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், எகிப்து வெங்காயத்தை ஹோட்டல்கள் மற்றும் இல்லங்களில் மக்கள் விரும்பி பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
500 டன் வெங்காயம்... மேலும், தற்போது மும்பை துறைமுகத்திற்கு எகிப்திலிருந்து 500 டன் வெங்காயம் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவற்றில் இருந்து தினந்தோறும் 20 டன் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
உரிக்கும்போது மட்டும் கண்ணீர் சிந்தினால் போதும்... இதனால், குடும்பத் தலைவிகளின் வெங்காயப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இனி அவர்கள் வெங்காயம் உரிக்கும் போது மட்டும் கண்ணீர் சிந்தினால் போதும், வெங்காய விலையை நினைத்து அழ வேண்டியதில்லை.
No comments:
Post a Comment