Latest News

மதுவிலக்கு: கருணாநிதி, வைகோ, திருமா மீது அமைச்சர் நத்தம் ஒரே அறிக்கையில் பொளேர் பாய்ச்சல்!


தீவிர மது விலக்கு கோரும் வைகோ தனது மகன் புகையிலை விற்பனை நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளது குறித்து விளக்கம் அளிப்பரா என மின்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுவிலக்கு எனும் ஆயுதத்தை வைத்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவ்வப்போது எழுந்து வந்த மது விலக்கு விவகாரத்தை தி.மு.க. கையெலெடுத்து ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. தொடர்ந்து, மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் மது விலக்கு பிரச்சினையில் மேலும் அனலைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனால் எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடவே இந்த பிரச்சினையில் போராட்டத்தை நடத்தி வருவதாக ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுவிலக்கு ஆயுதம்

கடந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு நிகழ்த்தி வரும் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருப்பதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதை ஆயுதமாக பயன்படுத்தலாம் என ஆழ்ந்து யோசித்து, 'மதுவிலக்கு' என்ற ஆயுதத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முனைந்துள்ளன என்பது அவற்றின் போக்கிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது. மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை வரையறைக்கு உட்பட்டது. வன்முறை போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுவது இல்லை. இது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். எனவே தான், மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், முழு மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் இதே தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி எனில், 'பந்த்' போன்ற போராட்டங்கள் மதுவிலக்கிற்காக நடத்தப்படுபவை அல்ல என்பது தெள்ளத் தெளிவாகிறது. அரசியல் ஆதாயங்களுக்காகத் தான் தற்போது மதுவிலக்கு பற்றி பல்வேறு கட்சிகளும் பேசி வருகின்றன.

சசிபெருமாள் போராட்டம்

31.7.2015 அன்று கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை சந்திப்பில் அமைந்தள்ள ஒரு மதுபானக் கடையை அகற்றுவது தொடர்பாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த காவல் துறையிடம் மதுவிற்கு எதிரான மக்கள் இயக்கம் அனுமதி கேட்டு, அந்த மனு காவல் துறையினரால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவருமான ஜெயசீலன் மற்றும் சசிபெருமாள் ஆகியோர் உண்ணாமலைக்கடை சந்திப்பில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள 130 அடி உயர அலைபேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர். அங்கு கூடியிருந்த மக்களிடம் சம்பந்தப்பட்ட கடை ஏழு நாட்களுக்குள் மாற்றப்பட்டு விடும் என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை டாஸ்மாக் மேலாளர் அளித்துள்ளார். 40 அடி உயரம் வரை சென்ற ஜெயசீலன் கீழே இறங்கி விட்டார். சசிபெருமாளை கீழே இறக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது, அங்கே அவர் நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது. சசிபெருமாளை கீழே இறக்கி குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். சசிபெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்குள்ள மருத்துவ அதிகாரி தெரிவித்ததையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சசிபெருமாள் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சசிபெருமாளின் மரணம் வருத்தத்திற்குரியது, வேதனை அளிக்கிறது, துரதிஷ்டவசமானது என்றாலும், அவர் நடத்திய போராட்டம் காந்திய வழியில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அஹிம்சை வழியிலான போராட்டங்கள் மட்டுமே ஒரு குறிக்கோளை அடைய வழிவகுக்கும். இதைத்தான் மகாத்மா காந்தி கடைபிடித்தார். ஆனால், தன்னை காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு, கோபுரத்தின் உச்சில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது காந்திய வழியாகுமா? சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது அருவருக்கத்தக்கதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்.


கருணாநிதி பேசலாமா?

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு ரத்து செய்து அதன் மூலம் மதுவின் கொடிய பழக்கத்திற்கு தமிழக மக்களை ஆட்படுத்திய தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது மதுவிலக்கு பற்றி பேசுவது வேடிக்கையானதும், வினோதமானதும் ஆகும். மதுவிலக்கு பற்றி பல எதிர்க்கட்சிகள் பேசுவதைப் பார்த்து, தானும் இதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தற்போது கருணாநிதி மதுவிலக்கு குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். 'ஆட்சிக் கட்டில்' கனவில் உள்ள கருணாநிதி தான் ஆட்சிக்கு வந்தால் 'மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று பூசி மெழுகி, பின்னர் தற்போது முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என 10 ஆம் தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சொல்வது அரசியல் ஆதாயம் தேடுவது அல்லாமல் வேறு என்ன? 1971 ஆம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி கொட்டும் மழையில், கருணாநிதி இல்லத்திற்கு சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொண்ட போதும், அதை எடுத்தெறிந்து மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதிக்கு மதுவிலக்கை பற்றி பேச ஏதேனும் அருகதை உள்ளதா? புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் அவருக்கு வேண்டிய இருவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச என்ன யோக்யதை? 1996 ஆம் ஆண்டிலிருந்து மதுவிலக்கு செயல்படுத்தப்படும் என அவ்வப்போது வாக்குறுதியை அளித்து, அவற்றை காற்றில் பறக்கவிட்டு, மக்களை ஏமாற்றிய கருணாநிதி, இப்போது மதுவிலக்கை பற்றி பேசுவது அரசியல் ஆதாயத்திற்கு தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

திருமாவுக்கு என்ன நெருக்கடி?

அரசியல் லாபத்திற்காக தான் மதுவிலக்கு பற்றி அரசியல் கட்சிகள் பேசுவதாக சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ''மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக மேலெழுந்திருக்கிறது. மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் லாபம் அடையலாம் என்று எண்ணும் சிலர் மதுவிலக்கு மாவீரர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்தானா என்ற ஐயம் நமக்கு எழுகிறது' என்று கூறி இருந்தார். மேலும், ''மீண்டும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது இருக்கும் அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி முன்பு செய்ததைவிட இன்னும் தீவிரமாக கள்ளச் சாராய தொழிலில் அவர்கள் ஈடுபடக் கூடும்'' என்றும் கூறியுள்ளார். அதே தொல்.திருமாவளவன் தற்போது மதுவிலக்கை வற்புறுத்தி கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது எந்த அரசியல் நெருக்கடியின் காரணமாக என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

காங், பா.ஜ.க. மீது பாய்ச்சல்

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதே தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திருச்சி பொதுக்கூட்டத்தில் புதிய மதுக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் என்று பேசியதற்கு பதில் அளிக்கையில், ''இந்தப் புதிய மதுக் கொள்கையை கொண்டு வருவோம் என ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அப்படிப்பட்ட மதுக் கொள்கையை ஏன் கொண்டு வரவில்லை'' என்று வினவி இருக்கிறார். அவரது கருத்து சரியானது தான். அவர் கூறிய அதே வார்த்தைகள் பா.ஜ.க.வுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் நீங்கலாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஏனைய மாநிலங்களில், முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுத்த பின்னர் தமிழகத்தில் முழு மதுவிலக்கு பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசட்டும். பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கூட, மதுபானம் கள்ளச்சந்தையில் அதிக அளவில் கிடைக்கிறது என்பது தமிழிசைக்கு தெரியாதா?

புகையிலை விற்பனை நிறுவன பங்குதாரராக வைகோ மகன்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒருபடி மேலே சென்று வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 1ஆம் தேதி அன்று அங்கு ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வைகோவின் தாயாரும் பங்கேற்றார். ஆனால், 2ஆம் தேதி வைகோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் வைகோவின் தாயார் கலந்து கொள்ளவில்லை. அப்படியென்றால், 2ஆம் தேதி வன்முறை வெடிக்கும், மதுபானக் கடை சூறையாடப்படும் என்பதால் தான் தனது தாயாரை கலந்து கொள்ள வேண்டாம் என்று வைகோ கூறியுள்ளாரா? வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததிலிருந்தே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தற்போது கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலமான 2009-லிருந்து இதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாக வாய் திறக்காத வைகோ 2ஆம் தேதி அன்று போராட்டம் நடத்தியது அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காக? மதுவைப் போன்று புகையிலையும் தீமை விளைவிக்கும் பொருள் தான் என்பது வைகோவுக்கு தெரியுமா? தெரியாதா? 2000ஆம் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வரும் Tobacco Depot என்ற நிறுவனத்தில் வைகோவின் புதல்வர் ஜி.துரை வையாபுரி பங்குதாரராக உள்ளாரே. இதற்கு வைகோவின் பதில் என்ன? மதுப்பழக்கம் என்பது ஒரு சமூகப் பிரச்னை. எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், முகாம்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அருகே மதுபானக் கடைகள் இருப்பதாக சொல்வது முற்றிலும் தவறானது ஆகும். மதுபான விற்பனைக்கான விதிகளில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த 504 டாஸ்மாக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு உள்ளன. மதுவிலக்கு பற்றி பேசுவதாலும், அதற்கென போராட்டம் நடத்துவதாலும் தேர்தல் களத்தில் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகம் வளர்ச்சிப் பாதையில், முன்னேற்றப் பாதையில், மனிதவள குறியீட்டில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், அரசுக்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால், மதுவிலக்கு குறித்து போராட்டம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கம் கற்பிக்கலாம் என்று மனப்பால் குடிப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.