7 வது ஊதியக் கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதிய கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்த குழு, ஆகஸ்ட் மாத இறுதியில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சிவில், பாதுகாப்பு அமைப்புகளிடம் ஊதிய குழு ஆலோசனை நடத்தியது. அடுத்த மாதம் ஊதிய கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதன் தலைவர் நீதிபதி ஏகே மாத்தூர் அறிவித்திருந்த நிலையில், 7 வது ஊதிய கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4 மாத காலம் அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment