பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 7 வார்டுகளில் போட்டியிட்டது அதிமுக. அதில் 6 வார்டுகளில் டெபாசிட்டை இழந்த அந்த கட்சி ஒரு தொகுதியில் மட்டும் டெபாசிட்டை காப்பாற்றியதுடன், 3வது இடத்துக்கு வந்து அசத்தியுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் மொத்தமுள்ள 198 வார்டுகளில் 197 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் பாஜக 100 வார்டுகளை வென்று தனிப்பெரும் கட்சியாக மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
76 வார்டுகளில் காங்கிரசும், 8 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதனிடையே, அதிமுக சார்பிலும், நகரில் தமிழர்கள் பெருவாரியாக உள்ள 7 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் அக்கட்சி பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா. அதன்படி, 96வது வார்டு ஒக்கலிபுரம் வேட்பாளராக பி.சுப்பிரமணி, 120வது வார்டு காட்டன்பேட்டை வேட்பாளராக கே.சுந்தரமூர்த்தி, 95வது வார்டு சுபாஷ் நகர் வேட்பாளராக கே.குமார், 80வது வார்டு ஹொய்சாலா நகர் வேட்பாளராக கே.சிம்சன் சண்முகம், 48வது வார்டு முனீஸ்வரா நகர் வேட்பாளராக துளசி அன்பரசன், 60வது வார்டு சகாயபுரம் வேட்பாளராக ஜெ.சகாயராஜ், 170வது வார்டு ஜெயநகர் வேட்பாளராக டி.முருகேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால், அதிமுக 6 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துவிட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில், முனீஸ்வரா நகர் வேட்பாளரான துளசி அன்பரசன் மட்டும் டெபாசிட்டை காப்பாற்றிக்கொண்டார். மேலும், அந்த வார்டில் 3வது பெரிய கட்சியாகவும் வாக்குகளை பெற்றுள்ளார். முனீஸ்வராநகர் என்பது, தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், புலிகேசிநகர் (பிரேசர்டவுன்) சட்டசபை தொகுதிக்கு உட்பட ஒரு வார்டாகும். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக மஜத கட்சியின் அகண்ட சீனிவாச மூர்த்தி உள்ளார். முனீஸ்வரா நகர் வார்டை காங்கிரஸ் வேட்பாளர் கைப்பற்றிய நிலையில், 2வது இடத்தை மஜத பிடித்துள்ளது. 3வது இடத்தை துளசி பிடித்துள்ளார். பாஜக வேட்பாளரைவிட இவர் அதிக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. துளசி அன்பரசன் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 2418 ஆகும்.
No comments:
Post a Comment