தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார் அவருக்கு வயது 64. செங்கோட்டையை சேர்ந்த கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி அதிமுக தென்காசி தொகுதி துணை அமைப்பாளர்,நகரமன்ற துணைத்தலைவர்,நகர துணை செயலாளர்,செங்கோட்டைகூட்டுறவு பால் விநியோக சங்கத்தலைவர்,செங்கோட்டை வீட்டு வசதி சங்க தலைவர்,தமிழ்நாடு மூலிகை வாரிய தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
1953ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்த செந்தூர் பாண்டியனுக்கு சண்முகதுரைச்சி என்ற மனைவியும், ஐயப்பராஜ் (சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக உள்ளார்), கிருஷ்ணமுரளி என்ற இரண்டு மகன்களும், பிரியதர்ஷினி (டாக்டர்) என்ற மகளும் உள்ளனர். இவரது தந்தை பூலியப்பதலைவனார் தாயார் ராசத்தியம்மாள். 8 ஆண்டுகள் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் சட்டமன்ற பொது குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.டந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பு வகித்து கட்சி தலைமையிலும், தொண்டர்களிடமும் நம்பிக்கை பெற்று திறம்பட பணியாற்றி வந்தவர்செந்தூர்பாண்டியன்
முதல்முறை அமைச்சர்
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நெல்லை கடையநல்லூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார் செந்தூர் பாண்டியன். ஜூலை 4, 2011ம் ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, கதர் மற்றும் கிராமியத் தொழில்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது செந்தூர் பாண்டியன், சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டிலேயே ஜூன் 27ம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இலாக இல்லாத அமைச்சராக சில மாதங்கள் இருந்தார். ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற போது அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தூர் பாண்டியன் இன்று காலை 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். செந்தூர் பாண்டியன் உடல் விமானம் மூலம் சொந்த ஊரான செங்கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. நாளைய தினம் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment