மர்மமான முறையில் உயிரிழந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி, ரியல் எஸ்டேட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சிபிஐ முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த மார்ச் மாதம் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடினர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. நெருக்கடிக்கு பயந்த சித்தராமையா அரசு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணையில் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது. அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் நடத்த ரவி திட்டமிட்டிருந்ததாகவும், பெங்களூர் அடுத்த சிக்கபள்ளாப்பூர் பகுதியில் 50 ஏக்கர் நிலம் வாங்க அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த பிசினசுக்காக, தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பணம் வசூலித்துள்ளார் ரவி.
சிக்பள்ளாப்பூரில் நிலம் கையகப்படுத்துவதற்காக, அங்குள்ள நில உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்துள்ளார் ரவி. ஆனால், அதில் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்று கூறப்படுகிறது. சட்டப்படி, அவர்களிடமிருந்து நிலத்தை வாங்க முடியாது என்ற விவரம் ரவிக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு பணமும் கிடையாது, நிலமும் கிடையாது என்று அவர்கள் கூறிவிட்டனராம். இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள் ரவியை நெருக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரவி தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மனைவியுடனான தனிப்பட்ட பிரச்சினைகள் தவிர்த்து நில விவகாரமும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment