பேராசைக்காரர்களும் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்களும் எல்லா தொழிலிலும் இருக்கிறார்கள். அதற்கு மருத்துவத்துறையும் விதிவிலக்கல்ல. குறிப்பாக, மருந்துகளின் விற்பனை என்பது கோடிக் கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும் ஓர் சந்தை என்ப தால், அதில் கலப்படங்களும் போலிகளும் இருக்க வாய்ப்பும் அதிகம். அதிலும், மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாதவை என்று தடை செய்யப்பட்ட மருந்துகள் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடம் போய்ச் சேர்ந்தால் என்ன ஆகும்?
மருந்துகளின் முதல்நிலைப் பரிசோதகரும், நீரிழிவு சிறப்பு மருத்துவருமான பரணிதரனிடம் இதுபற்றி கேட்டோம்…
ஒரு மருந்தை அரசு எப்படி அங்கீகரிக்கிறது?
‘‘உலகமெங்கும் பல்வேறு மருத்துவர்களும் ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகளில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் Food and Drug Administration என்கிற சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். உதாரணத்துக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த மாத்திரையை Phase 1, Phase 2, Phase 3 என்று மூன்று கட்டங்களாக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர் பரிசோதிப்பார்கள்.
முதல் கட்டமாக ஆய்வகத்தில் எலி போன்ற உயிரினங்களுக்குக் கொடுத்து கண்காணிப்பார்கள். இதில் சாதகமான முடிவுகள் கிடைத்தால் மனிதர்களில் சிலருக்கு அவர்களின் அனுமதி பெற்று பரிசோதிப்பார்கள். இதற்கு Ethical committee அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இந்த கமிட்டியில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். ஓர் ஆய்வு நன்றாக வர வேண்டும் என்பதற்காக பரிசோதனைக்கு ஒப்புக் கொள்கிறவர்களிடம் எழுத்துப்பூர்வமாகவோ, வீடியோவாகவோ ஒப்புதல் பெற்றுக்கொண்ட பிறகு பரிசோதனை செய்வார்கள்.
இந்த இரண்டாம் கட்டத்தில் சாதகமான முடிவுகள் கிடைத்துவிட்டால், மூன்றாம் கட்டமாக உலகமெங்கும் செயல்படுகிற அந்த துறை சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனங்களுக்கு மருந்தை அனுப்புவார்கள். ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டு வருகிற ஆய்வு நிறுவனங்கள் மருந்தை சரி பார்த்த பிறகே, நேரடியாக நோயாளி களுக்குப் பயன்படுத்த முடியும்.’’ இத்தனை கட்ட சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிற மருந்து பிறகு ஏன் தடை செய்யப்படுகிறது?
‘‘புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதும் ஆராய்ச்சி யின் ஒரு கட்டம்தான். இதை Phase 4 என்று சொல்வார்கள். இந்த நான்காம் கட்டத்தில் பக்கவிளைவு எதுவும் ஏற்படுகிறதா என்பதை மருத்துவர் கண்காணிப்பார்கள். குறிப்பாக, இதய சம்பந்தமான பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறுகள் போல பெரிய விளைவுகள் இருப்பது தெரிந்தால் உடனடியாகத் தங்களது புகாரை பார்மக்கோவிஜிலன்ஸுக்கு அனுப்புவார்கள். பல இடங்களிலிருந்தும் இதே போல புகார் வரத் தொடங்கினால்தான் அனுமதிக்கப்பட்ட அதே மருந்தை மீண்டும் தடை செய்கிறா£ர்கள்…’’
தடை செய்யப்படுகிற மருந்துகள் பற்றிய தகவல்கள் மருத்துவர்களுக்கு உடனே தெரிவிக்கப்பட்டு விடுமா?
‘‘மருத்துவருக்குப் படித்து முடித்தவுடனேயே இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக வேண்டும். இந்த கவுன்சிலில் இருந்து மாதா மாதம் மருத்துவ பத்திரிகை அனுப்பப்படும். ஒரு மருந்து தடை செய்யப்பட்டால் அதன் விவரங்கள் அந்த இதழில் குறிப்பிடப்பட்டிருக்கும். திடீரென்று ஒரு வைரஸ் காய்ச்சல் வருகிறது என்றால் அதற்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒரு மருத்துவருக்கு 5 வருடங்களுக்குத்தான் மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமத்தை மருத்துவ கவுன்சில் வழங்குகிறது. அதன்பிறகு, அந்த உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால் Continued medical education என்ற தொடர்ச்சியான கல்வி மருத்துவர்களிடம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். மருத்துவர்கள் அப்டேட் ஆகியிருந்தால்தான் அடுத்த 5 வருடங்களுக்கு உரிமம் புதுப்பிக்கப்படும்…’’
வெளிநாடுகளில் தடை செய்யப்படுகிற பல மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறதே?
‘‘10 வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். அந்த சூழ்நிலையில் வேண்டுமானால் அதுபோன்ற குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்பு உண்டு. இன்றோ மருந்துகளின் உற்பத்தியில் மற்ற நாடுகளை நம்பி நாம் இல்லை. வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யும் போதும், மருந்துகளைக் கவனமாகப் பரிசீலித்தே இந்திய அரசு அனுமதிக்கிறது. அதனால், இந்த குற்றம் நடக்க வாய்ப்பு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
தடைசெய்யப்பட்ட மருந்துகள் சந்தையில் கிடைக்கக்கூடாது. அப்படிக் கிடைத்தால் அது முழுக்க முழுக்க சட்ட விரோதமானதே!’’ ‘ஒரு இருமல் மருந்தை என் குழந்தைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று அந்த மருந்தை இப்போது தடை செய்திருக்கிறார்கள். ஒரு தவறான மருந்தைத்தான் இத்தனை நாட்களாக என் குழந்தைக்குக் கொடுத்து வந்தேனா’ என்று பயத்தோடு சமூக வலைத்தளம் ஒன்றில் ஒரு பெண் எழுதியிருக்கிறார்.
இது பற்றி… ‘‘மருத்துவ உலகில் தினந்தோறும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று ஒரு முடிவு கிடைத்தால், இன்று அதற்கு மாற்றான வேறு முடிவு கிடைக்கிறது. அது போல Phase 4 நிலையில் இருந்த ஒரு மருந்தை தடை செய்திருப்பார்கள். 3 மாதங்களுக்கு முன்னர் டாக்டர் அந்த மருந்தை பரிந்துரைத்திருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மருந்து தடை செய்யப்பட்டிருக்கலாம். இந்த பெண்மணி மருத்துவரைப் பார்க்காமலேயே ஓவர் தி கவுன்டராக மருந்துக்கடையில் வாங்கிக் கொண்டிருந்திருக்கலாம். மருத்துவர்கள் தங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்து கொள்ளாமல் போனாலோ, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் நேரடியாக வாங்கினாலோதான் இதுபோன்ற தவறுகள் நடக்கும்…’’
இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
‘‘நோயாளிகள் மருத்துவரை நம்பித்தான் வருகிறார்கள். இதில் மருத்துவர்களுக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அதனால், எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவர்கள் தங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். அடுத்ததாக, மக்களுக்கும் இதில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மருந்துகளின் விவரங்கள் நோயாளிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மருந்து அலர்ஜி ஏற்படுத்தினால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவர் எழுதிக் கொடுக்கிற மருந்தைத்தான் மருந்துக்கடைகளில் கொடுக்கிறார்களா, காலாவதியான மருந்தா, மருந்து வாங்கியதற்கான ரசீது கொடுக்கிறார்களா என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். மருத்து வரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மருந்துக்கடைகளில் நம் அரசு தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் தீவிரமான ஆய்வுகளை நடத்தி தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் வராமல் அரசு தடுக்க வேண்டும்!’’
அரசு என்ன செய்கிறது?
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் அப்துல் காதர் சொல்கிறார்…. ‘‘மருந்துகளின் தடை என்பதில் பல விஷயங்கள் உள்ளன. ஒருநாட்டில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னொரு நாட்டில் புழக்கத்தில் இருக்கும். இது அந்தந்த நாட்டின் பருவநிலை, உடல்நிலை, கிடைக்கும் முடிவுகள், அரசாங்கம் போன்ற பல காரணிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. தடை செய்யப்படுகிற மருந்து, மீண்டும் புழக்கத்துக்கு வருவதும் உண்டு. நம் நாட்டிலேயே கிஸீணீறீரீவீஸீ என்ற மருந்து முதலில் தடை செய்யப்பட்டது.
அதன்பிறகு, அந்தத் தடை தவறானது என்று நீதிமன்றம் சென்று அந்தத் தடையை மருந்து நிறுவனம் நீக்கியது. Phenylpropanolamine என்ற வேதிப்பொருள் கலந்த Dcold, Coldact மாத்திரைகளுக்குத் தடை வந்தது. அதன்பிறகு, பினைல் ப்ரொப நோலமைன் இல்லாமல் மாற்று வேதிப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிற டிகோல்ட், கோல்ட்ஆக்ட் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு, இப்போது சந்தையில் கிடைக்கின்றன. தடை செய்யப்பட்ட Nimesulide வேதிப்பொருள் கலந்த Sumo இருமல் மருந்து, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
வயது வந்தவர்களுக்கோ இந்த மருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோல பல நுட்பமான விஷயங்கள் இதில் இருக்கின்றன.
பொதுவாக, ஒரு மருந்து தடை செய்யப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அந்த மருந்துத் தயாரிப்பை நிறுத்திவிடுகின்றன. மருத்துவர்களும் அந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை. மருந்து கட்டுப்பாட்டுத்துறையிலிருந்து பார்மஸி கவுன்சிலுக்கு தகவல் கொடுத்துவிடுவோம். கடைகளுக்கு பரிசோதனைக்குச் செல்லும்போது தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்களைச் சொல்லி அந்த மருந்தைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொல்வோம். அதனால், தடை செய்யப்பட்ட மருந்துகள் புழங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
இதையெல்லாம் மீறி, எங்கேனும் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதாகவோ, மருத்துவர் பரிந்துரைப்ப தாகவோ தெரிந்தால் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை, 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை & 6 என்ற முகவரிக்குப் புகார் அனுப்பலாம். தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விவரங்களை www.drugscontrol.org, www.cdsco.nic.in ஆகிய இணையதளங்களிலும் தெரிந்து
கொள்ளலாம்.’’
No comments:
Post a Comment