பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளதால் தீர்ப்பை அறிவிக்கவுள்ள கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் வீட்டுக்குப் பாதுகாப்பு கொடுத்துள்ளது கர்நாடக போலீஸ். மேலும் பெங்களூரு, கர்நாடக - தமிழக எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனுக்களை விசாரித்து வந்த நீதிபதி குமாரசாமி நாளை தனது தீர்ப்பை வெளியிடவுள்ளார். நாளை முற்பகல் 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகள் பெங்களூரில் முடுக்கி வி்டப்பட்டுள்ளன. இதுகுறித்த ஒரு பார்வை....
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி 45 நாட்களில் அதாவது கடந்த 11ம் தேதி அனைத்து கட்ட விசாரணையையும் முடித்தார் நீதிபதி. நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை மாலை கர்நாடக உயர்நீதிமன்றப் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் அறிவித்தார். கடந்த முறை தீர்ப்பு வந்தபோது பெங்களூரில் குவிந்து இருந்த அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். எனவே இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், டிஜிபி ஓம்.பிரகாஷ், பெங்களூர் கமிஷனர் எம்.என்.ரெட்டியுடன் ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அரசும், பெங்களூரு காவல்துறையும் எடுத்துள்ளன. தீர்ப்பையொட்டி நாளை காலை 6 முதல், இரவு 9 மணி வரை உயர்நீதிமன்றத்தைச் சுற்றி 1 கி.மீ தொலைவுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கோர்ட் வளாகத்தை சுற்றி கூடுதல் ஆணையர் அசோக்குமார் தலைமையில் 4 உதவி ஆணையர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். கோர்ட்டில் உள்ள 5 நுழைவு வாயில்களில் 4 நுழைவு வாயில்கள் மூடப்படும். திறந்து இருக்கும் நுழைவு வாயில் வழியாக போலீஸ் உயர் அதிகாரிகள், கோர்ட்டு பதிவாளர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கோர்ட் முன்பு 5 பேருக்கு மேல் கூடி பேசவோ, போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி கிடையாது. ஆயுதம் எடுத்து செல்லவும், பட்டாசு வெடிக்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது. நீதிபதி குமாரசாமி வீட்டுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பெங்களூர் எலஹங்காவில் உள்ள அவரது வீட்டில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது காருக்கு முன்னும், பின்னும் 2 கார்களில் 10 போலீசார் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். நீதிபதி குமாரசாமி பயணம் செய்யும் காரில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். அரசு வக்கீல் ஆச்சார்யாவின் வீடு, காருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. 6 போலீசார் எப்போதும் ஆச்சார்யாவுடன் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு மனு தீர்ப்பு என்பதால் ஜெயலலிதாவும், மற்றவர்களும் நாளை ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. தீர்ப்பை அறியும் ஆவலில் அதிமுகவினர் பெங்களூரில் குவிந்துள்ளனர். நாளை பெங்களூருக்கு வர முயலும் அதிமுகவினரை எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். மாநில எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளி பகுதிகளில் தடுப்பு கம்பிகளை அமைத்து வாகனங்களை கண்காணிக்க தொடங்கியும் உள்ளனர். இருப்பினும் தமிழக வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்த மாட்டோம் என்று கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment