அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக சென்னை ஐஐடி நிர்வாகம் நீக்காவிட்டால் தேசிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்பு ஐஐடி-யின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வருகிறது.
அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கொள்கை கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் மாணவர்களிடையே கொண்டு சென்று ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் பணியை, அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்பு செய்து வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்புக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் திடீரென்று தடை விதித்ததது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் சென்னையில் இன்று போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் சென்னையில் 11 மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஐஐடியில், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உளவியல் போர்
வாசகர் வட்டம் அமைப்புக்கு தடை விதித்தது மாணவர்கள் மீதான உளவியல் போர் என்றும், மாணவர் அமைப்பின் தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இந்துத்துவா மாணவர் அமைப்புகள் கருத்துகளை கூறியபோது தடை விதிக்காது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தடையை நீக்குக
தடையை உடனடியாக ஐஐடி நிர்வாகம் நீக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தேசிய அளவில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் போராட்டம்
வாசகர் வட்ட மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை என உறுதி தர வேண்டும் என்றும், உறுதிதர தவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி தோறும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.
தேசிய அளவில்
பிற மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகளை ஒன்று திரட்டவும் முடிவு செய்துள்ளதாகவும், தெலங்கானா, ஆந்திர மாநில மாணவர்களின் ஆதரவை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாணவர் அமைப்பினர் கூறினர்.
போராட்டம் தொடரும்
கடவுளையே விமர்சித்த மண் தமிழகம், மோடி அரசை விமர்சிப்பது மாணவர் உரிமை என்று கூறிய மாணவர் அமைப்பினர், மாணவர் உரிமையை தடுக்க நினைக்கும் செயல் சர்வாதிகார போக்கு கொண்டது என்றும், ஐஐடி நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை முழுமையாக ஒடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment