Latest News

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க நாளைமுதல் சிறப்பு முகாம்


வாக்காளருக்கான ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை இணைப்பதற்கான வாக்குச்சாவடி அளவிலான சிறப்பு முகாம்கள் நாளை தொடங்குகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு தொடக்கம்

இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் 3-ந் தேதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்து, ஆதார் எண், செல்போன் எண், இமெயில் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி 6-ந் தேதி நிறைவடைந்துவிட்டது. 1.84 கோடி வாக்காளர்களை நேரடியாக அலுவலர்கள் சந்தித்து கூடுதல் விவரங்களை சேகரித்துள்ளனர்.

இதன் பிறகு சிறப்பு முகாம்கள் நடத்தி விவரங்கள் சேர்க்கும் பணி தொடங்கவுள்ளது. மொத்தமுள்ள 64ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நாளை (12-ந் தேதி) தொடங்கும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26, மே 10, 24 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படும். காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு சிறப்பு முகாம் நிறைவடையும்.

ஆதார் நகலை கொண்டு செல்லுங்கள்

சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், பெயர் சேர்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய புகைப்படம் சேர்த்தல் ஆகியவற்றையும் செய்யலாம்.

ஆதார் எண், இமெயில், செல்போன் எண் போன்றவற்றை இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு வருகிறவர்கள், தங்களைப்பற்றிய பதிவுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றுக்கான அரசு தரப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக, முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் முகவரிக்கான ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போட், ஆதார் அட்டை போன்றவற்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டையின் நகலை வைத்திருப்பது நல்லது.

ஆதார் எண் இல்லாவிட்டால்?

ஆதார் எண் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக விண்ணப்பித்து இருந்தால் இ.ஐ.டி. என்ற எண் தரப்பட்டு இருக்கும். சிறப்பு முகாமில் அலுவலரிடம் அந்த எண்ணை கொடுக்கலாம். ஆதாருக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது டி.ஐ.என். என்ற எண் தரப்பட்டு இருக்கும். அதைக் கொடுக்க வேண்டும்.

இ.ஐ.டி. அல்லது டி.ஐ.என். இதில் எந்த எண் தரப்பட்டாலும், எதிர்காலத்தில் அந்த வாக்காளர் தனக்கான ஆதார் எண் பெறும்போது, அவரின் வாக்காளர் விவரங்களோடு அந்த ஆதார் எண் தானாக இணைந்துவிடும். ஒவ்வொரு வாக்காளருடன் தேர்தல் கமிஷன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குவதற்கு இமெயில், தொலைபேசி எண், செல்போன் எண் போன்றவை அவசியமாக உள்ளன.

2 கோடி பேர் விவரங்கள்

தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.18 கோடி பேர், அதாவது 82 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.84 கோடி வாக்காளர்களின் கூடுதல் விவரங்களோடு, 9-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடி பேரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 35 லட்சம் பேரின் கூடுதல் விவரங்கள், வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன.

ஏப்ரல் 13-ந் தேதி முதல் மே 31-ந் தேதிவரை தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தங்கள் அலுவலகங்களில் பிற்பகலில் முகாம் நடத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் வருவாய்த்துறை அதிகாரிகள்தான்.

சரிபார்ப்புப் பணி

எந்த நாட்களில் அவர்கள் முகாம் நடத்துகிறார்கள் என்பதை அந்தந்த பகுதியில் மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள். அவர்களையும் அணுகி ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கலாம். திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே பெறப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை அவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் கொடுத்திருப்பார்கள். அதில் சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு இமெயில் அல்லது செல்போனில் அழைப்பு விடுத்து சரிபார்ப்புப் பணியைச் செய்வார்கள்.

நடமாடும் ஆதார் முகாம்

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 70 சதவீதத்துக்கு மேல் மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 68 சதவீதம் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. குறைவான அளவில் ஆதார் அட்டை வழங்கப்பட்ட இடங்களில் நடமாடும் முகாம்களை வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வாக்காளரின் கூடுதல் விவரங்களை சேர்க்கும் திட்டத்தின் இறுதி நாள் மே 31-ந் தேதியாகும். தமிழகத்தில் 82 சதவீதம் ஆதார் எண் பெற்றுள்ளதால் இன்னும் 15 நாட்களுக்குள் அவர்களின் கூடுதல் விவரங்களைப் பெறும் பணி நிறைவு பெறும் என்று நினைக்கிறேன்.

தேர்தலுக்கு தயாரா?

முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது என்ன நிலையில் வாக்காளர் பட்டியல் மற்றும் விவரங்கள் இருக்கிறதோ, அதன் அடிப்படையில் தேர்தலை நடத்துவோம்.

ஆதார் எண் மற்றும் கூடுதல் விவரங்களை வாக்காளர் பட்டியலோடு இணைப்பதற்கான விழிப்புணர்வு தொடர்பான சி.டி. மற்றும் தமிழ், ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்ட பிரதிகளை வெளியிடுகிறேன். அந்த விழிப்புணர்வு சி.டி.கள், சினிமா தியேட்டர் மற்றும் டி.வி.களில் ஒளிபரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.