ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த சமூக நல் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இது குறித்து சமூக நல அமைப்பின் நிர்வாகி தங்கம் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்தின் வறட்சியான மாவட்டம் என்றழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் இவர்கள் விமானம் மூலம் வெளிநாடு செல்வதற்கு சென்னை விமான நிலையம் வழியாக செல்கிறார்கள் . துபாய் செல்பவர்களில் பெரும்பாலானோர் மதுரை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமானம் மூலம் செல்கிறார்கள்.
மேலும் இந்துக்களின் புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மதுரை விமான நிலையம் வழியாக உள் நாட்டு விமானங்களில் வருகின்றனர். இப்படியாக இம்மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் விமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகும் மேலும் இம்மாவட்டத்தில் எரிவாயு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் இக்கோரிக்கை மேலும் வலுப்பெருகிறது. சில ஆண்டுகளுக்கும் முன் ராஜாக்கள் பாளையம் அருகே விமான நிலையம் வரவிருப்பதாக செய்திகள் வந்தன
பாதுகாப்பு வசதிகள் என்ற அடிப்படையில் காண்போமானால் ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளம் உள்ளது.
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை உள்ளிட்ட பகுதிகளில் இந்த கடற்படை விமான தளம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது எட்டாத கனவு என்ற நிலையை மாற்ற முயற்சி எடுத்து இக்கனவை சாத்தியப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தின் சிறப்பம்சங்கள் ..
– உச்சிப்புளியில், இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட, பின்னர் கைவிடப்பட்ட 3000 அடி நீளமுடைய விமான தளத்தைத்தான் கடற்படை தன் வசம் எடுத்து அங்கு கடற்படைத் தளத்தை அமைத்தது. இலங்கைப் பிரச்சினையைத் தொடர்ந்து இங்கு 1982ம் ஆண்டு கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.- ஆரம்பத்தில் இந்த தளத்திலிருந்து ஐலண்டர், டோர்னியர், சேட்டாக் ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.- 1997ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி இந்த கடற்படை தளம் ராஜாளி 2 என பெயர் மாற்றப்பட்டது.- தற்போது இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முழுமையான ஒரு கடற்படை விமான தளமாக மாற்றப்பட்டு ஐ.என்.எஸ். பருந்து எனவும் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.- மிகப் பெரிய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்களை இப்போது இயக்க முடியும்.- கப்பல்களில் இருக்கும் ஹெலிகாப்டர்களை இங்கிருந்தபடியே கட்டுப்படுத்தி, இயக்கும் வசதியும் இந்த நிலையத்திற்கு உண்டு
மண்டபம் கேம்ப் ரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் உச்சிப்புளி அமைந்துள்ளது.
No comments:
Post a Comment