கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை மேகதாது பிரச்சினையில் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து அவர் பேசினார். முன்னதாக, திமுக பொருளாளர் ஸ்டாலின் விஜயகாந்த்தை வரவேற்றார்.
தேமுதிக கட்சி ஆரம்பித்த பிறகு திமுக தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் நேரில் சென்று சந்திப்பது இது முதல்முறை என்பதால் செய்தியாளர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்திருந்தனர்.
கருணாநிதியை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது அவர் கூறுகையில், மேகதூது அணை உள்ளிட்ட 5 முக்கிய பிரச்சினைகள் குறித்து கருணாநிதியுடன் ஆலோசித்தேன். இந்தச் சந்திப்பின் போது, நிலஎடுப்பு மசோதா, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் பிரச்சினை, செம்மரக் கடத்தல் மற்றும் குடிநீர்ப் பிரச்சினை குறித்தும் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன்.
அதிமுக தவிர அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளேன். மேகதாது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் முதல்வர் தனியாக சென்று பிரதமரை சந்தித்துள்ளார். ஆகையால்தான் அதிமுகவைத் தவிர அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறேன். முதல்வரின் செயல் சுயநலமானது.
நாளை பிரதமரை டெல்லியில் சந்திக்க உள்ளேன். அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். முதலாவதாக மூத்த தலைவர் கலைஞரை சந்தித்தேன். அவரும் தனது கட்சியின் சார்பாக பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார் என்றார் விஜயகாந்த்.
No comments:
Post a Comment