நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. காத்மாண்டில் 6.7 ரிக்டர் அளவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்திய நேரப்படி இன்று மதியம் 12:39 மணியளவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தன்மை, இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியுடன் வசிப்பிடங்களை விட்டு சிலர் வெளியேறினர்.
எவரெஸ்ட் சிகரத்தின் முகாம் ஒன்றில் பூகம்பத்துக்குப் பிந்தைய அதிர்வை உணர்ந்தாக, மலையேறும் வீரர் ஜிம் டேவிட்சன் தெரிவித்தார்.
பாதிப்பு நிலை என்ன?
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2,000-ஐ எட்டிவிட்டதாக, அந்நாட்டு ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாராயண் கேத்கர் தெரிவித்தார்.
அதேவேளையில், பலி எண்ணிக்கை 2,123 என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் அளித்தார்.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 6,000 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களை இடிபாடுகளில் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் நேற்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவீட்டில் 7.9 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவுக்கு வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நேபாள அதிபருடன் பிரணாப் பேச்சு
நேபாள அதிபர் ராம் பரண் யாதவுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு தொலைபேசி மூலம் பேசினார். அப்போது, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
நேபாளத்தின் சமீபத்திய நிலவரம் மற்றும் நிலநடுக்கதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி கேட்டறிந்த பிரணாப், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத்துக்கு இந்தியா சார்பில் முழு ஒத்துழைப்பும் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரணாப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment