இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்டு 162 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்தியன் ரயில்வே தனது 162வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில் அதன் வரலாறு குறித்து நினைவு கூர்வது நமது கடமையாகும். இந்தியாவில் ரயில்வே உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். அவா்கள் ஆட்சியின் போதுதான் இந்தியாவில் முதன்முறையாக ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. நாம் வரலாற்றில் படித்து மறந்து போன டல்ஹவுசி பிரபு கால கட்டத்தில் தான் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலாக ரயில் ேசவை மும்பை-தானே நகரங்களுக்கு இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி துவக்கப்பட்டது. 34 கிமீ கொண்ட இந்த தூரத்தை அப்போதைய நீராவி இன்ஜின் ரயில் 57 நிமிடங்களில், அதாவது சுமார் ஒரு மணி நேரத்தில் கடந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த 14 பெட்டிகளில் 400 பேர் பயணம் செய்தனர்.
தற்போது அங்குதான் இப்போதைய மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. முதல் ரயில் சேவை துவக்கப்பட்ட அந்த தினத்தையொட்டியே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 முதல் 16 வரை தேசிய ரயில்வே வாரம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதி ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு வசதியான நகரமாக விளங்கியது. பொருட்களை சேகரித்து, பாதுகாத்து வைப்பதற்கும இந்த இடம் வசதியாக அமைந்தது. இந்த இடம் போரி பந்தர் என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் இந்தியாவின் முதல் ரயில் சேவை நிறுவனமான ‘தி கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே’ நிறுவப்பட்டது. இதற்காக அங்கு 1850ம் ஆண்டு ரயில் நிலையம் ஒன்றையும் நிறுவினர். அது போரிபந்தர் டெர்மினல் என்று அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் ரயில் சேவையின் வளர்ச்சியை ஒட்டி இங்கு பிரமாண்டமான ரயில் நிலையத்தை அமைக்க ஆங்கிலேய ஆட்சி முடிவு செய்தது. இதற்கான கட்டிடம் வடிவமைக்கும் பணி பிரெடரிக் வில்லியம்ஸ் ஸ்டீவன்ஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இதற்காக அவருக்கு ஆங்கில அரசு அளித்த சம்பளம் ரூ.16.14 லட்சம் ஆகும். இதற்காக வில்லியம் ஸ்டீவன்ஸ் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போரி பந்தர் ரயில் நிலையத்தை அமைப்பதற்கான கட்டிட மாதிரிகளை ஆய்வு செய்தார். பின்னர் இந்திய, இத்தாலி, கோதிக் கட்டிட கலைகளின் அடிப்படையில் இந்திய கலைஞர்களின் கைவண்ணத்தில் புதிய வடிவிலான இந்திய ரயில்வேநிலையம் அங்கு உருவாக்கப்பட்டது. இது மத்திய லண்டனில் அமைந்திருந்த பாங்கிராஸ் ரயில் நிலையத்தை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிலையம்தான் தற்போது மும்பை ரயில் நிலையம்.
இந்த நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 1888ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது அதற்கு விக்டோரியா டெர்மினல் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுவே கிரேட் இந்தியன் பெனி்சுலா நிறுவனத்தின் தலைமையகமாகவும் செயல்பட்டது. ரயில் டிக்கெட் அச்சடிக்கும் பணிகளும் இங்கு நடைபெற்றன. ‘தி கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே’ என்ற பெயா், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியன் ரயில்வே என்று பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு தான் மகாராஷ்டிரா அரசு விக்டோரியா டெர்மினல் என்ற பெயரை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் என்று மாற்றியது. 2004ல் இந்த நிலையம் ஐநாவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலிலும் இடத்தை பிடித்து தனது பெருமையை தக்க வைத்துக்கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 42 ரயில்வே பிரிவுகள் காணப்பட்டன. 1951ம் ஆண்டு அவை அனைத்தும் தேசியமயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு தெற்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே என்று பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் ரயில் சேவை நிறுவனமாக இந்தியன் ரயில்வே உயர்ந்துள்ளது. தற்போது இந்தியன் ரயில்வேயில் ஆண்டுதோறும் சுமார் 500 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். கடந்த 10 மாதங்களில் 90 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 16 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரத்து 140 கிமீ நீளத்துக்கு ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியன் ரயில்வே சார்பில் நாள்தோறும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது.
1853ம் ஆண்டு, பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தும் சத்தத்துடன் நீராவி இன்ஜினால் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னா் நீராவி இன்ஜின், டீசல் இன்ஜினாக உருமாற்றம் அடைந்தது. தற்போது மின் தொடர் வண்டிகளாக மாறிவிட்டன. அதே போல் ஆரம்பத்தில் சுமார் 40 கிமீ வேகத்தில் சென்ற ரயில்கள் இன்றைக்கு மணிக்கு 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் தடதடக்கின்றன. மேலும் வருங்காலத்தில் புல்லட் ரயில்கள், அதிவேக ரயில்கள் என கால மாற்றத்தின் காரணமாக மின்னல்வேகத்தில் செல்லும் ரயில்கள் இந்தியாவில் வரவிருக்கின்றன. கடந்த காலத்தில் ரயிலில் பயணம் செய்தால் உடல் முழுவதும் கருப்பாக அழுக்கு படியும். அந்தக்காலம் இப்போது மலையேறிவிட்டது. இன்றைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளில் நமது அலங்காரம் கலையாமல் பயணிக்கும் வகையில் ரயில் பயணம் மாறியுள்ளது.
சென்னைக்கு ரயில் வந்தது
மும்பை-தானேவை தொடர்ந்து ஓராண்டுக்கு பிறகு 1854ம் ஆண்டு அவுரா-ஹூக்ளி இடையே முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மும்பையில் ரயில் பாதை தொடங்கப்பட்ட அதே ஆண்டில் சென்னை ராயபுரத்தில் ரயில் பாதை பணி தொடங்கப்பட்டது. 1853ம் ஆண்டு துவங்கிய இத்திட்டம் 1856ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போது ராயபுரத்தில் இருந்து ஆற்காடு அருகே உள்ள வாலாஜா வரை ரயில் சேவை இயக்கப்பட்டது. பின்னர் இது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
நாடு விடுதலை பெற்ற பிறகு முதன்முதலாக தொடங்கப்பட்ட ரயில்வே பிரிவு தென்னக ரயில்வே ஆகும். இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் செயல்பட்ட பல்வேறு ரயில் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து 1951ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தென்னக ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment