Latest News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி உட்பட பாஜக மூத்த தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உட்பட 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கபடாததால், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் சதிக் குற்றச்சாட்டை உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரேபரேலி நீதிமன்ற உத்தரவையே கடந்த 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் மனு தாக்கல் செய்தார். இவர் பாபர் மசூதி இடிப்புக்கு எதிரான வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவராவார். இவரே, அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் தனியாக வேறொரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டை ரத்து செய்த அலகாபாத் நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்குமாறு கோரியிருந்தார். மேலும், மத்தியில் ஆட்சி மாற்றத்தால் சிபிஐ இந்த வழக்கை திசை திருப்ப வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ-க்கும் நோட்டீஸ்:

இதற்கிடையில், அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த 2010 மே மாதம் சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வாதங்களுடன் தயாராவதற்கு கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என சிபிஐ இன்று கோரியது. எனவே கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி.ஐ.க்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

யாருக்கெல்லாம் நோட்டீஸ்:

அத்வானி தவிர முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சதீஸ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, வி.எச். டால்மியா, மஹந்த் அவைத்தியநாத், ஆர்.வி.வேதாந்தி, பரம் ஹன்ஸ் ராம், ராம் சந்திர தாஸ், ஜகதீஷ் முனி மஹராஜ், பி.எல்.சர்மா, நிர்திய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஸ் நகர், மோரேஷ்வர் சாவே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.